சென்னை: சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி கலையரசன் குழுவின் விசாரணைக்கு தடை கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சேர்ந்த மணிதணிகை குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கே.சூரப்பா, துணை வேந்தராக பதவியேற்றதில் இருந்து பல்கலைக்கழகத்தில் செலவீனங்களை குறைத்தல், தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்துதல், பல்கலைக்கழகத்தை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட எதிர்கால சந்ததியினர் பலனடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த சூழலில் திருச்சி லால்குடி சுரேஷ் என்பவர், பணி நியமனத்தில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாகவும், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் ஒவ்வொரிடமும் ரூ.13 முதல் ரூ.15 லட்சம் வரை வசூல் செய்ததாகவும் துணை வேந்தர் சூரப்பாவுக்கு எதிராக முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஆன்லைனில் புகார் அனுப்பினார்.

புகார் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு அமைத்து உயர் கல்வித்துறை செயலர் 11.11.2020ல் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை.

முதல் கட்ட விசாரணை நடத்தாமலும், துணை வேந்தரிடம் விளக்கம் கேட்காமலும் விசாரணைக்கு ஆணையிடப்பட்டுள்ளது. ஆகையால்  அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

சூரப்பாவுக்கு எதிராக புகார் அளித்தவர் புகாரில் போலி முகவரி, போலி பின்கோடு எண் அளித்துள்ளார். புகாரில் குறிப்பிட்டுள்ள அவரது செல்போன் எண் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடையது. புகார்தாரரின் உண்மை தன்மையை ஆராயாமல் விசாரணைக் குழு அமைத்து இருப்பது சட்டவிரோதம்.

எனவே, நீதிபதி கலையரசன் குழு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை குழு அமைத்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.