பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடாக சேர்ந்தவர்களை நீக்க உத்தரவு! ககன்தீப் சிங் பேடி

சென்னை: பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில்   முறைகேடுகள் நடந்து வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து,  13 மாவட்ட ஆட்சியர்களுடன் வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி இன்று  ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து,  ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு திட்டத்தில் சேர்க்கப்பட்டவர்கள் பற்றிய முழு விவரங்களை  ஒரு வாரத்திற்குள் ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளார்.  மேலும் முறைகேடாக சேர்ந்து இருப்பவர்களை உடனடியாக திட்டத்தில் இருந்து நீக்கவும் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உதவிடும் வகையிலும் மழை மற்றும் வறட்சிக் காலத்தில் நிவாரணம் வழங்கும் வகையிலும் மத்திய அரசு சார்பில் பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவித் திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டம் மூலம் ஆண்டுக்கு 6,000 ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு 3 தவணையாக வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற விரும்பும் விவசாயிகள், வருவாய்த் துறை அதிகாரிகளிடம் தங்கள் நிலத்திற்கான பட்டா, சிட்டா ஆகியவை பெற்று, அவற்றுடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை அந்தந்தப் பகுதி வேளாண்மைத் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து அவர்கள் மூலம் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு இந்த நிதி உதவியைப் பெற்று வந்தனர்.

இதன் காரணமாக, விவசாயிகள் அரசுஅதிகாரிகளை சந்தித்து, ஆவனங்கள் பெறுவதிலும், விண்ணப்பம் செய்திலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, விவசாயிகளே தானாக முன்வந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது

. இதனைத் தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து விவசாயிகள் தானாக முன்வந்து, தனியார் கணினி மையத்தில் ஆன்லைனில் நிதி உதவிக்கு விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்தனர்.

இவ்வாறு ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களில் பல முறைகேடாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில்,  கடலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 79 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.  ஆனால்,  கடலூர் அருகே உள்ள பிள்ளையார் மேடு கிராமத்திலும், புவனகிரி அருகே உள்ள வளையமாதேவி கிராமத்திலும் விவசாயிகள் அல்லாதவர்களின் வங்கிக் கணக்கில் 2 தவணையாக ரூ.4,000 வரவு வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோல  நெய்வேலி கணினி மையம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கணினி மையத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள்  கிடைத்திருப்பதாக கூறப்பட்டது. மேலும், பல மாவட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, இந்த   முறைகேடு குறித்து 13 மாவட்ட ஆட்சியர்களுடன் வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆலோசனை மேற்கொண்டார். அதையடுத்து, ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு திட்டத்தில் சேர்க்கப்பட்டவர்கள் பற்றிய முழு விவரங்களை 1 வாரத்திற்குள் ஆய்வு செய்ய உத்தரவிடப்படதுடன், முறைகேடாக சேர்ந்தவர்களை உடனே நீக்கவும் அறிவுறுத்தி உள்ளது.