சென்னை:

மிழகத்தில் நிதிநிறுவனங்களில் வட்டி வசூல், கடன் வசூல்கள் மறுஉத்தரவு வரும் நிறுத்த வேண்டும் என்றும், ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் வரும் 31ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி, ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என அறிவித்தார். இதை ஏற்று, தமிழகத்திலும் ஏப்ரல் 14ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்து உள்ளார்.

முன்னதாக இன்று காலை கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆய்வு நடத்தினார். அதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவுகளின் படி பல்வேறு  உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது,  அதன்படி,

1. 31.3.2020 வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவும், இதர உத்தரவுகளும் 14.4.2020 வரை நீட்டிக்கப்படுகின்றது.

2. ஊரடங்கு உத்தரவினால் ஏற்படக்கூடிய இடையூறுகளை தவிர்க்கவும், மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தடையின்றி கிடைக்கவும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளைக் கொண்ட 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் தலைமையில் இப்பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

3. பல கிராமங்களிலும், நகரங்களிலும் தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவை தினசரி / வாராந்திர / மாத வட்டி மற்றும் அசலை வசூல் செய்கின்றன.

தற்போது, ஊரடங்கு உத்தரவினால் யாரும் வேலைக்குச் செல்ல இயலாத நிலையில், இது போன்ற பண வசூலை உடனடியாக, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த உத்தரவினை மீறுபவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகின்றனர்.

4. பெரிய காய்கறி மார்க்கெட் / சந்தை இருக்குமிடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் வகையில், காய்கறி / பழ வகைகளை விற்கும் கடைகளை விசாலமான இடங்களில் அல்லது மைதானங்களில் அமைக்க வேண்டும். அப்போது மக்களிடையே 3 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும். மளிகைக் கடைகளிலும், மருந்து கடைகளிலும், காய்கறி கடைகளிலும் சமூக விலகல் முறையைத் தீவிரமாக பின்பற்ற வேண்டும்.

5. அதிக மக்கள் வாழும் குடிசை மாற்று குடியிருப்புகள், பொது மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்கள், சந்தைகள், பெரிய தெருக்கள் போன்ற இடங்களில் அவ்வப்போது தீயணைப்பு இயந்திரங்கள் மூலமாக கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும்.

6. இந்த நோய்த் தொற்று மிக மிகக் கடுமையானது என்பதையும், இது ஒரு ஆட்கொல்லி நோய் என்பதையும், இது மனித சமுதாயத்திற்கு ஒரு பேரழிவை ஏற்படுத்த வல்லது என்பதையும், மக்கள் உணரும் வண்ணம், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனையும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் ஒலிபெருக்கி / தண்டோரா மூலம் பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும், துண்டுப் பிரசுரம் மூலம் வீடு வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

7. கர்ப்பிணிப் பெண்கள், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, காச நோய், எச்ஐவி தொற்று உள்ளோர், போன்றவர்கள் அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் பெறுகின்றனர். அவர்களுக்கு இரு மாதங்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும்.

8. அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் நகர்வுகள் தடையின்றி நடைபெற பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்திலும், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் உதவி மையம் அமைக்கப்படும். இது தொடர்பான கோரிக்கைகள் இருப்பின், அவற்றிற்கான அத்தியாவசிய சான்றிதழை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் வழங்குவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமும் மத்திய மாநில அரசோடு இணைந்து, வீட்டைவிட்டு வெளியே செல்வதை தவிர்ப்போம்… கொரோனா வைரஸ் கோரப் பிடியில்  இருந்து நம்மை  பாதுகாப்போம்…