மதுரை:

ரசு ஊழியர்களுக்குக் கூடுதலாக வழங்கிய சம்பளம், ஓய்வூதியத்தை, அவர்களிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும் என்று தமிழக தலைமை செயலருக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

மதுரை அருகே உள்ள பெருமாள்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் இந்த உத்தரவை பிறப்பத்து உள்ளது.

ஓய்வு பெற்ற  தலைமை ஆசிரியர் சுப்புராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தனக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் நிர்ணயம் செய்ததில் தவறு நேர்ந்ததாகவும், கூடுதலாக வழங்கப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திரும்ப வசூலிக்க  கருவூலத்துறை அலுவலர் கடந்த 2015ம் ஆண்டு உத்தரவிட்டு, தனது கணக்கில் இருந்து ரூ.6152 பிடித்தம் செய்யப்பட்டது. இதை திரும்ப  திரும்ப வழங்க உத்தரவிடக்கோரி இருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓய்வு பெற்ற ஊழியர்களாக இருந்தாலும் கூடுதல் ஓய்வூதியம், ஓய்வூதிய பலன்கள் பெற உரிமையில்லை  என்றும்,  அதே நேரத்தில் அரசு ஊழியர்களின் பணி உரிமையை பாதிக்கும் வகையில் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு வாய்ப்பு வழங்காமல் பிறப்பிக்கக்கூடாது என்று கூறினார்.

மேலும், மனுதாரருக்கு தற்போது 81 வயதாகிறது. இனிமேலும் அவரது ஓய்வூதியத்தில் பணம் பிடித்தம் செய்தால் மனுதாரரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறிய நீதிபதி, தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் மற்றும் சம்பள பாக்கி தொகையை திரும்ப வசூலிப்பது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களை தலைமை செயலர் பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.