செத்தும் கொடுத்த வள்ளல்!: ஒரிஜினல் சீதக்காதியின் சுவாரஸ்ய வரலாறு!

“விஜய் சேதுபதி நடித்த சீதக்காதி படத்தின் தலைப்பு, உண்மையாகவே வாழ்ந்த வள்ளல் சீதக்காதியின் புகழைக் குறைப்பதாக இருக்கிறது. ஆகவே அந்தப் பெயரை மாற்றவேண்டும்” என்று உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடுத்திருக்கிறார். அது ஒருபுறம் இருக்க.. உண்மையான சீதக்காதி யார், அவரை “செத்தும் கொடுத்தான் சீதக்காதி” என்று ஏன் சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

பதினேழாம் நூற்றாண்டில் தென் தமிழகத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற வள்ளல் சீதக்காதி. இவர் இயற்பெயர் ‘ஷைகு அப்துல் காதிறு’ .

‘மவ்லா சாகிப்’ என்ற பெரியதம்பி    –  ‘சய்யிது அகமது நாய்ச்சியார் தம்பதிகளின் மூன்று பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளை, சீதக்காதி.

கடல் வணிகம் செய்யும் குடும்பம். இப்படிப்பட்டவர்களை மரக்கலாயர் என்று குறிப்பிடுவார்கள். காலப்போக்கில் இது மரக்காயர் என்று மருவியது. இந்தக் குடும்பத்து ஆண்களின் பெயர் பின்னால் இந்த மரக்காயர் என்பதும் சேர்க்கப்படும்.

சீதக்காதி பிறந்த வளர்ந்த ஊர்  கீழக்கரை என்றும் காயல்பட்டினம் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

இவர் தமிழர் – இசுலாமியர்.

சாதி மத பாகுபாடு இன்றி அனைவருக்கும் அள்ளிக்கொடுத்த வள்ளல் சீதக்காதி. இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் கிழவன்சேதுபதிக்கு அமைச்சர் போன்று செயல்பட்டவர்

கி.பி.1692 ம் ஆண்டில் மதுரை ஆட்சியின் கீழ் அடிமையாக இருக்க விரும்பாமல், தனியாட்சி நடத்தத் தொடங்கினார் கிழவன் சேதுபதி.  அப்பொழுது பாதுகாப்பிற்காக இராமநாதபுரத்தில் கோட்டையையும் அரண்மனையையும் புதிதாக விரிவாக்கிப் பெரும் பாதுகாப்புடன் கட்டினார்.  . அதற்குப் பொன்னும்,பொருளும் கொடுத்து உதவியவர் சீதக்காதி.

டில்லியை அரசாண்ட  முகலாயப்பேரரசர் அவுரங்கசீப் சீதக்காதியின் மீது பெருமதிப்புக் கொண்டவர் என்பதற்கும் வரலாற்றுக் குறிப்புகள் உண்டு..

அந்த காலட்டத்தில் இஸ்லாமிய மார்க்கப்பற்று மிக்க அறிஞராக  சதக்கத்துல்லா வலி  என்பவர் விளங்கினார்.  இதை அறிந்த அவுரங்கசீப், அவரை தென்னிந்தியாவின் கலீபாவாகப் பதவி ஏற்கும்படி கோரி, கடிதம் எழுவதினார். ஆனால் வலி அவர்கள் அதனை ஏற்கவில்லை;

சீதக்காதி பற்றிக் குறிப்பிட்டு அவரின் சிறப்புக்களை எடுத்துக் கூறி கடிதம் அனுப்பினார். இதனால் சீதக்காதி பெருமை குறித்து அறிந்த அவுரங்கசீப்,  வங்காளத்தின் கலீபாவாக சீதக்காதயை நியமித்தார். சீதக்காதியும் மகிழ்வுடன் அப்பொறுப்பை ஏற்றார்.

வங்கத்தில் சிலகாலம் வாழ்ந்த சீதக்காதி, பிறகு தமிழகம் திரும்பினார். அப்போது விலையுயர்ந்த மணியாரத்தை அவுரங்கசீப்புக்கு அனுப்பினார். இதைப் பெற்றுக்கொண்ட அவுரங்கசீப் பெரிதும் மகிழ்ந்தார்.

சீதக்காதி  வங்காளம், சீனா, மலாக்கா போன்ற நாடுகளுக்கு  கப்பல்களில் முத்து பாக்கு, கிராம்பு மிளகு என்று பல பொருட்களை ஏற்றுமதி செய்தார்.  அவரைப் பற்றி டச்சு, ஆங்கிலேயே ஆவணங்கள் இருக்கின்றன.  சம்பாதித்த செல்வத்தை அனைவருக்கும் அளித்து மகிழ்ந்தார் சீதக்காதி.

இவர் குறித்து அறிந்துகொள்ள செய்தக்காதி நொண்டிநாடகம், செய்தக்காதி மரக்காயர் திருமணவாழ்த்து ஆகியவையும் அவர் பெயரிலான தனிப்பாடல்களும் உதவுகின்றன.

இவற்றை உமறுப்புலவர், படிக்காசுப்புலவர், நமச்சிவாயப்புலவர், தாசி முதலியோர்  ஆகியோர் எழுதியுள்ளனர்.

நபிகள்நாயகத்தின் வரலாற்றைச் சொல்லும்  ‘சீறாப்புராணம்’ காவியத்தை எழுதிய உமறுப்புலவருக்கு புரவலராக திகழ்ந்தவர் சீதக்காதிதான்.

அந்தக் காலகட்டத்தில் பெரும் பஞ்சம் தமிழகத்தில் வந்தது. உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை. விலைவாசி வானளவுக்கு உயர்ந்தது. ஏராளமானோர் உண்ணஉணவின்றி மாண்டார்கள்.

அப்போது ஏழை எளியோருக்கு எவவிதத் தடையும் இல்லாமல் இலவசமாக உணவு வழங்கி உதவினார் சீதக்காதி. இதனை, படிக்காசு புலவர் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

சீதக்காதி, ஏறக்குறைய நானூறு வருடங்களுக்க முன்   கீழக்கரை ஜும்மா பள்ளியை கட்டினார்.  இது பெரிய குத்பா பள்ளிவாசல் என அழைக்கப்படுகிறது.

மனதைக் கவரும் அழகிய வேலைப்பாடு கொண்டது இந்த பள்ளிவாசல்.  பொருந்திய கருங்கற்களால் கட்டப்பட்ட பள்ளிவாசல் இதுதான்.  மசூதிக்குள் 1,200 பூக்களுக்கு மேல் கற்களில் செதுக்கப்பட்டுள்ளது காண்பரை வியக்க வைக்கும். இங்குள்ள ஒவ்வொரு சின்னஞ்சிறு சிற்ப வேலையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருக்கும்.

மன்னர் கிழவன் சேதுபதி காலத்தில் ராமேஸ்வரம்  கோயில் புதுப்பிக்கப்பட்து  சீதக்காதியின் பொறுப்பில்தான்!  அந்த ஆலயத்திருப்பணிக்கு மட்டுமல்ல மேலும் எண்ணற்ற  ஆலயத் திருப்பணிகளுக்கு உதவியவர் சீதக்காதி.

ராமநாதபுரம், மதுரை பகுதிகளில் ஏராளமான அன்னச் சத்திரங்களையும் அமைத்து வழிப்போக்கர்கள் பசிப்பிணையைத் தீர்த்தவர்.

சீதக்காதி   கி.பி 1720-ம் ஆண்டில் காலமானார். அவரால் கட்டப்பட்ட ஜும்மா பள்ளி வளாகத்திலேயே  அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சீதக்காதியின் வள்ளல்தன்மையை உயர்த்தி “செத்தும் கொடுத்தான் சீதக்காதி” என்று ஒரு (கற்பனைச்) சம்பவமும் கூறப்படுகிறது.

சீதக்ககாதி மறைந்து அடக்கம் செய்யப்பட்ட நிலையில்,   அவரால் ஆதரிக்கப்பட்ட படிக்காசுப் புலவர் உள்ளிட்ட பல புலவர்கள் சீதக்காதியின் சமாதிக்குச் சென்று அழுதனர். தங்கள் வாயில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டு, “இப்படிப் போய்விட்டீர்களே… இனி யார் எங்களை ஆதரிப்பார்கள்’ என கதறினர்.

அப்போது சீதக்காதி புதைக்கப்பட்டிருந்த சமாதி வெடித்தது. அதிலிருந்து சீதக்காதியின் கரம் வெளிப்பட்டது. அதில்  போட்டிருந்த மோதிரத்தை எடுத்துக்கொள்ளும்படி சீதக்காதியின் குரல் ஒலித்தது.

புலவர்களின் கற்பனையில் உதித்த இந்த சம்பம்தான்,  ‘செத்தும் கொடுத்த சீதக்காதியே’ என்ற பேச்சு வழக்காகிவிட்டது.

இப்படி சில கற்பனைகள் காலப்போக்கில் ஏற்பட்டிருக்கலாம். ஆனால்  வாழும்போது சாதிமதம் பார்க்காமல் அள்ளிக்கொடுத்த வள்ளல்தான் சீதக்காதி என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

இன்னொரு ஆச்சரியகரமான விசயம்.. பெரும் செல்வச்செழிப்புடன் வாழ்ந்து எல்லோருக்கும் அள்ளி அள்ளிக்கொடுத்த சீதக்காதி..  தனது ஓவியத்தையோ, சிலையையோ நிறுவிக்கொள்ளவில்லை.

ஆனாலும் என்ன… அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.

(சீதக்காதியின் மகள்வழிச் சந்ததியார் இன்னும் கீழக்கரையில் வாழ்ந்து வருகின்றனர்.   அவர் பெயரில் ராமநாதபும்-கீழக்கரை நெடுஞ்சாலையில் இருபது ஏக்கர் நிலப்பரப்பில் வள்ளல் சீதக்காதி நகர் அமைக்கப்பட்டுள்ளது.)

You may have missed