பள்ளி ஆசிரியைகள் கைத்தறி சேலை உடுத்த வேண்டும் : ஒரிசா அரசு உத்தரவு

 

புவனேஸ்வர்

ரிசா மாநிலத்தில் உள்ள பள்ளி ஆசிரியைகள் அவசியம் கைத்தறி சேலைகள் உடுத்த வேண்டும் என ஒரிசா அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒரிசா மாநில கைத்தறி துணிகள் மிகவும் புகழ் பெற்றவை ஆகும்.   சமீப காலமாக இந்த கைத்தறி துணிகள் விற்பனை மிகவும் குறைந்துள்ளன.    இதையே நம்பி உள்ள நெசவாளர்களின் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்புக்குள்ளாகி  இருக்கிறது.   அதை ஒட்டி ஒரிசா அரசின் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் துறை அமைச்சர் சினேகாங்கினி சுனா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், “ஒரிசா மாநில கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் போயனிகா என்னும் பெயரில் கைத்தறி சேலைகளை உருவாக்கி வருகிறது.  ஒரிசாவில் உள்ள நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியைகள் இனி கட்டாயம் இந்த போயனிகா கைத்தறி சேலைகளை உடுத்த வேண்டும்.

கைத்தறி நெசவாளர்களின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு இந்த உத்தரவு இடப்பட்டுள்ளது.  இதன் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு வருடம் முழுவதும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதே போல மாணவர்களின் சீருடைகளையும் கைத்தறியில் உருவாக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.   ஆண் ஆசிரியர்களின் கைத்தறி உடை பற்றி விரைவில் அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.