ராமநாதபுரம்,

ச்சிளங்குழந்தையை 4 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற காப்பக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் ஆதரவற்றோர்களுக்கு தொண்டு செய்வதாக ஏராளமான காப்பங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், ஒருசில காப்பங்கள் முறைகேடான செயல்களில் ஈடுபட்ட வருவது அவ்வப்போது வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில்  ‘ஆதார் டிரஸ்ட்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்த முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகம், ஆதரவற்ற குழந்தைகளை விற்பனை செய்துவந்தது தெரிய வந்தது.

இந்த காப்பகத்தை  பானுமதி என்பவர் நடத்திவருகிறார். இங்கு முதியோர் சிறுவர்கள் உள்பட பலர் தங்கி உள்ளனர். இந்நிலையில், இந்த காப்பகத்தில் பராமரிக்கப்படும் குழந்தைகளை பானுமதி விற்பனை செய்வதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து குழந்தை பாதுகாப்பு பிரிவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பிறந்து 10 நாள்களே ஆன குழந்தையைக் காப்பக நிர்வாகி பானுமதி 4 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து பானுமதி கைது செய்யப்பட்டார்.

இந்த 10 நாள் குழந்தையை ஆட்டோ ஓட்டுநர் கதிரேசன் என்பவர் காப்பகத்தில் கொடுத்தது சென்றது  தெரிய வந்தது. அந்த குழந்தையை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த குழந்தை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, திருடப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும்,  ஆட்டோ டிரைவர் கதிரேசனையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.