ஆஸ்கர் விருது படத்துக்கு தமிழ் தயாரிப்பாளர் நோட்டீஸ்

ஆஸ்கர் விருது படத்துக்கு தமிழ் தயாரிப்பாளர் நோட்டீஸ்

அண்மையில் அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் விருதில் 4 விருதுகளை தட்டி சென்ற படம் ‘பாராசைட்’. கொரியா மொழியில் தயாரான படம். இந்த படத்தின் கதையும், மின்சார கண்ணா தமிழ் படத்தின் கதையும் ஒன்று போல் இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் நடித்த மின்சார கண்ணா படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்தார்.அந்த படத்தை முதலில் தயாரித்தவர் கே.ஆர்.ஜி. அந்த படத்தின் உரிமை இப்போது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பனிடம் இருப்பதாக தெரிகிறது.

1999 ஆம் ஆண்டு வெளியான மின்சாரகண்ணா படத்தின் கதையும், பாராசைட் கதையும் ஒன்று போல் இருப்பதாகவும், தமிழ் படத்தை சுட்டு பாராசைட் படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் செய்தி பரவியது.

இது பற்றி கே.எஸ்.ரவிகுமாரிடம் கேட்டபோது’’ நான் பாராசைட் படத்தை இன்னும் பார்க்கவில்லை. இரண்டும் ஒரே கதை என்று கேள்விப்பட்டேன். இன்றைக்கு ஆஸ்கர் விருது பெற்றுள்ள படத்தின் கதை 20 வருடங்களுக்கு முன்பே எனக்குள் தோன்றி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்று தெரிவித்தார்.

ஆனால் இந்த விஷயத்தை தயாரிப்பாளர் தேனப்பன் லேசில் விடுவதாக இல்லை.
ஆஸ்கர் விருதில் தனக்கும் பங்கு கேட்கும் முடிவுக்கு வந்துள்ளார், அவர். ’எனது மின்சார கண்ணா படத்தை காப்பி அடித்து பாராசைட் படத்தை எடுத்தது ஏன் என்ற ரீதியில் –அந்த பட இயக்குநர் பாங் ஜோன் ஹோ வுக்கு காரசார கடிதம் அனுப்பி உள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஈஸ்வர் குப்புசாமி என்பவர் மூலம் கொரிய இயக்குநர் பாங் ஜோனுக்கு அனுப்பிய ஈ-மெயில் கடிதத்தில், மின்சார கண்ணா படத்தின் கதை, படம் வெளியான தேதி, படத்தில் நடித்த நட்சத்திரங்கள்,சென்சார் சான்றிதழ் நகல் உள்ளிட்ட விவரங்களை விளக்கமாக குறிப்பிட்டுள்ளார், தேனப்பன்.
கடிதத்துக்கு கொரிய இயக்குநர் பதில் அளிக்காவிட்டால் என்ன நடக்கும்?

கடிதம் அனுப்பிய வழக்கறிஞர் ஈஸ்வர் அளித்த பதில் இது; ‘’ எங்கள் கடிதத்துக்கு கொரிய இயக்குநர் பதில் அளிக்காவிட்டால் கொரிய தூதரகம் மூலம் அவருக்கு முறைப்படி நோட்டிஸ் அனுப்புவோம். ஆஸ்கர் விருது குழுவுக்கும் இந்த கதை திருட்டு குறித்து தகவல் தெரிவிப்போம்.
கதை திருட்டை கொரிய இயக்குநர் ஒப்புக்கொள்வார் என்று நம்புகிறேன்.அவர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் இதற்கு நஷ்டஈடு கேட்பது குறித்து தேனப்பன் முடிவு செய்வார்’ என்கிறார் வழக்கறிஞர் ஈஸ்வர்.

ஆஸ்கர் வரலாற்றில் அயல் நாட்டு படம் ஒன்று முதன் முதலாக ஆஸ்கர் விருது பெற்றதை ஆங்கிலேயர்கள் அல்லாத சினிமாக்காரர்கள் கொண்டாடி குதூகலித்துவரும் நிலையில், அதற்கு கோடம்பாக்கம் ரூபத்தில் சிக்கல்.

– ஏழுமலை வெங்கடேசன்