ஆஸ்கார் வென்ற ஆடை வடிவமைப்பாளர் பானு அத்தையா மரணம்!

மும்பை: புகழ்பெற்ற ‘காந்தி’ திரைப்படத்தில், சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கார் விருதை வென்ற பானு அத்தையா, தனது 91வது வயதில் உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார்.

‘காந்தி’ திரைப்படம் கடந்த 1983ம் ஆண்டு வெளியானதாகும். ரிச்சர்டு ஆட்டன்பரோ என்பவர் இயக்கிய அந்த திரைப்படத்தில், ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி, அதற்கான ஆஸ்கார் விருதையும் வென்றார்.

ஆஸ்கார் தவிர, தனது 50 ஆண்டுகால சினிமா பயணத்தில் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார் பானு அத்தையா. கடந்த 1956ம் ஆண்டு சி.ஐ.டி. என்ற இந்தி திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக அறிமுகமானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்கு மும்பையில் வசித்து வந்த பானு அத்தையா, கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானாதாக அவரது மகள் ராதிகா குப்தா தெரிவித்தார். பானு அத்தையா மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.