இரு மத முறைப்படி நடைபெற்ற ஒஸ்தி நடிகையின் திருமணம்: உறவினர்கள் பங்கேற்பு

ஒஸ்தி திரைப்பட நடிகை ரிச்சா, தன் நெடுநாள் காதலரான ஜோவை இரு குடும்ப சம்மதத்துடன் மணந்துள்ளார்.

லீடர் என்னும் படம் மூலம் நாயகியாக அறிமுகமான ரிச்சா, தனுஷுக்கு ஜோடியாக மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி போன்ற படங்களில் நடித்தார். மயக்கம் என்ன படம் ஹிட் ஆனாலும், ஒஸ்தி மூலமே சினிமா ரசிகர்களிடம் ரீச் ஆனார் ரிச்சா. தமிழில் இவ்விரண்டு படங்களுக்கு பிறகு எந்த படமும் நடிக்காத ரிச்சா, பெங்காலியில் பிக்ரம் சிங்கா, தெலுங்குவில் சரோசாரு, மிர்ச்சி, பாய் ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்தார். 2013ம் ஆண்டு மட்டும் இரு தெலுங்கு படங்களில் நடித்தவர், அதன் பின்னர் மேற்படிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்றார்.

வெளிநாட்டில் பிஸினஸ் ஸ்கூலில் தன்னுடன் படித்து வந்த ஜோவை காதலித்த ரிச்சா, தனது காதல் தொடர்பாக தனது வீட்டில் தெரிவிக்க, உடனடியாக நிச்சயமும் செய்யப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களை அப்போதே தனது டுவிட்டர் பக்கத்தில் ரிச்சா பதிவேற்றம் செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ரிச்சா – ஜோ ஜோடிக்கு இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்தில் இரு குடும்பத்தாரின் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. திருமணம் முடிந்த நிலையில், இருவரும் மெக்சிகன் மாகாணத்தில் குடியேற உள்ளனர்.

ரிச்சாவின் திருமணத்தை தொடர்ந்து, அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளம் மற்றும் அலைப்பேசி வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.