பிற நாடுகளில் நோட்டு மாற்றமும் பொருளாதார தடுமாற்றமும்! 

றுப்பு மற்றும் கள்ளப் பணத்தை ஒழிப்பதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இது போலவே வேறு சில நாடுகளிலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது உண்டு. ஆனால் துரதிருஷ்டவசமாக அம் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன.

அந்த சம்பவங்களை பார்ப்போம்.

1982-ல் கானா அரசு வரி ஏய்ப்பை கட்டுப்படுத்துவதற்காக 50 ’செய்டி’ (அவர்கள் ஊர் பணம்!) கரன்சியை செல்லாது என அறிவித்தது. பணத்தட்டுப்பாடு ஏற்படவே, கானா மக்கள் வெளிநாட்டு கரன்சிகளை பயன்படுத்த தொடங்கினர். (இங்கே தற்போது அஸ்ஸாமின் சில பகுதிகளில் பூட்டான் நாட்டு கரன்சிகளை பயன்படுத்துவதுபோல!) இதனால் கானா அரசின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

3

1984-ம் ஆண்டு நைஜீரியாவின் ராணுவ அரசு, ஊழலை ஒழிப்பு நடவடிக்கை என்று சொல்லி, பழைய கரன்சிகளை வாபஸ் வாங்கி, புதிய நோட்டுக்களை அறிமுகப்படுத்தியது.  ஆனால் முறையான ஏற்பாடுகள் இல்லாத இந்த நடவடிக்கையால் பணவீக்கம் கட்டுக்கடங்காமல் எகிற..  இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

1987-ம் ஆண்டு மியான்மர் நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்க 80 சதவீத கரன்சி நோட்டுகளை செல்லாது என ராணுவ அரசு அறிவித்தது. இதனால்  பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, நாடு முழுவதும் நடந்த போராட்டங்கள் வெடித்தன. பலர் பலியானார்கள்.

1991-ம் ஆண்டு சோவியத் யூனியனில் கரன்சி மதிப்பை அதிகரிப்பதற்காக  50,100 ரூபிள் நோட்டுகளை செல்லாது என்று அதிபர் மிக்கேல் கோர்பசேவ் அறிவித்தார். இதனால் நாட்டில் ஏகப்பட்ட குழப்பம்.  அறிவிப்பு  வெளியான அடுத்த எட்டே மாதங்களில் அவரது ஆட்சி  கலைக்கப்பட்டது.

1993-ம் ஆண்டு சையர் நாட்டில் சர்வாதிகாரி மொபுடு, கரன்சி சீர்திருத்தங்களை அமல்படுத்தினார். பொருளாதாரம் சீராவதற்கு பதிலாக சீர்குலையத் துவங்கியது.  1997-ல் மொபுடு ஆட்சியை இழக்க நேரிட்டது.

1996ம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசு பேப்பர் கரன்சி நோட்டுகளை பிளாஸ்டிக் நோட்டுக்களாக மாற்றியது. கள்ள நோட்டுகளின் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக உலகில் முதன் முறையாக  எடுக்கப்பட்ட நடவடிக்கை இது.

2015ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் அரசு கள்ள நோட்டை தடுக்கும் முயற்சியாக, 30 வருடமாக இருந்த நோட்டுகளை செல்லாது என  அறிவித்தது. இதனால் அந்நாட்டு பொருளாதாரம் கொஞ்சம் தடுமாறியது. ஆனாலும் பெரிய பாதிப்பு இல்லை.

2015ம் ஆண்டு ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே நூறு டிரில்லியன் டாலர் நோட்டை அறிமுகப்படுத்தினார். இதனால் அந்நாட்டு கரன்சியின் மதிப்பு குறைந்தது.

2010ல் வட கொரியாவில் அதிபர் கிம் ஜாங் கரன்சி சீர்திருத்தங்கள் கொண்டு வந்தார். இந்த நடவடிக்கையால் பொருளாதார தேக்கம் ஏற்பட்டது மக்கள் உணவுக்கும் வழியில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.