காஷ்மீரின் மற்ற பகுதிகளும் விரைவில் இந்தியாவுடன் இணையும்: கிரிராஜ் சிங்

--

புதுடெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்துசெய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சாய் சின் போன்றவையும் விரைவில் இந்தியா வசமாகும் என்று கூறியுள்ளார் பாரதீய ஜனதா தலைவர்களுள் ஒருவரான கிரிராஜ் சிங்.

அந்த விஷயத்தில் தனக்கு 200% நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பீகார் மாநிலத்தின் பெகுசராய் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிரிராஜ் சிங். கடந்தமுறை மத்திய அமைச்சராகவும் இருந்தவர். சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவதில் பெயர் பெற்றவர்.

அவர் கூறியுள்ளதாவது, “பாகிஸ்தான் மற்றும் சீன ஆக்ரமிப்பில் உள்ள காஷ்மீரின் பகுதிகள் விரைவில் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று 200% உறுதியாக நம்புகிறேன். பாகிஸ்தானுக்கான சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டதில், காங்கிரஸ் கட்சியும் பாகிஸ்தானும் ஒரே மொழியில் பேசுகின்றன. அதன் ரகசியம்தான் புரியவில்லை.

பாகிஸ்தானுக்கு ஏற்ப காங்கிரஸ் பேசுகிறதா? அல்லது காங்கிரசுக்கு ஏற்ப பாகிஸ்தான் பேசுகிறதா? என்றே தெரியவில்லை. இனிமேல் காஷ்மீர் மாநிலம் வளர்ச்சியை நோக்கிச் செல்லும்” என்றார்.