“மற்ற வீரர்களும் சிறப்பாக பங்காற்ற வேண்டும்” – கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்பஜன்!

புதுடெல்லி: கேப்டன் பதவியானது விராத் கோலிக்கு அழுத்தம் தரவில்லை என்றும், அணியின் வெற்றிக்கு, இதர வீரர்களும் சிறப்பாக பங்காற்ற வேண்டுமெனவும் கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.

ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை இழந்ததையடுத்து, கோலியின் கேப்டன்சி மீது விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், அதுகுறித்துப் பேசியுள்ள ஹர்பஜன் சிங், “கேப்டன் பதவியானது, கோலிக்கு அழுத்தம் கொடுப்பதாக நான் நினைக்கவில்லை. அவருக்கு அது பழக்கமான விஷயமே. அவர் பொதுவாக சவால்களை விரும்புவர்.

அவரின் ஆட்டத்தை, தலைமைப் பொறுப்பு பாதிப்பதாக நான் நினைக்கவில்லை. ஆட்டத்தை வெல்வதற்கு மற்ற வீரர்களும் சிறப்பான பங்களிப்பை ஆற்ற வேண்டும். ஏனென்றால், ஒரு போட்டியை ஒரு வீரரால் மட்டுமே வெல்ல முடியாது.

மற்ற வீரர்களும் நன்றாக ஆடினால்தான், கோலியின் சுமை குறையும். இரண்டாவது போட்டியில், கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்” என்றுள்ளார் அவர்.