சென்னை : மத்திய பா.ஜ.க. அரசை வீழ்த்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.

ஆளும் பா.ஜ.கவுக்கு எதிராக தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்றத்தில் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்த நிலையில் இது பற்றி விளக்கம் அளிக்கும் வகையில் அதிமுக.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதில், பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம். பிறர் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் நமக்கென்ன பயன்?

நமக்கென்ன பயன் என ஆராய்ந்து பார்க்காமல் முடிவெடுக்கும் நிலையில் அதிமுக அரசு இல்லை. பா.ஜ., அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக.வினால் முடியும். 1999 ல் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ., அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து, வீட்டுக்கு அனுப்பியதே அதிமுக தான்” என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.