எங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரிடமும் விலை போகமாட்டாரகள்: ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி

பெங்களூரூ:

காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைப்போம் என்றும்,  எங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரிடமும் விலை போகமாட்டாரகள் என மதசார்பற்ற ஜனதா தள கட்சி முதல்வர் வேட்பாளர் குமாரசாமி கூறி உள்ளார். மேலும் காங்கிரசுடனான கூட்டணியில் எந்தவித மாற்றமுமில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

கர்நாடகாவில் எந்தவொரு கட்சிக்கும் தனி மெஜாரிட்ட கிடைக்காத நிலையில், பாரதிய ஜனதா ஆட்சியை பிடிப்பதை தடுக்கும் வகையில்,  37 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ள  குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சிக்கு  காங்கிரஸ் தனது ஆதரவை வழங்கி உள்ளது.

முதல்வராக குமாரசாமியும், துணைமுதல்வராக மாநில காங்கிரஸ் தலைவரும் இருக்கும் வகையில் கூட்டணி ஆட்சிக்கு வித்திட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து நேற்று கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார் குமாரசாமி. அப்போது காங்கிரசின் ஆதரவு கடிதத்தையும்  கவர்னரிடம்  கொடுத்தார்.

ஆனால் 104 இடங்களை கைப்பற்றியுள்ள பாஜ, தாங்கள்தன் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளதாக கூறி  தங்களை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில், பாஜ நிர்வாக ஈஸ்வரப்பா, காங்கிரஸ், ஜெடிஎஸ் கட்சியை சேர்ந்த சிலர் தங்களிடம் பேசி வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ஏற்கனவே பாரதியஜனதா ஆட்சி அமைக்க திரைமறைவில் குதிரை பேரம் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜேடிஎஸ் கட்சி தலைவர் குமாரசாமி,  எங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரிடமும் விலை போகமாட்டாரகள் என்று திட்டவட்டமாக கூறினார்.

இன்று மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, ஏற்கனவே காங்கிரஸ் உடன் செல்ல முடிவு செய்துள்ளோம். இதுகுறித்து   சட்டமன்றக் கட்சி உறுப்பினர்களிடம் ஆலோசனை நடத்தினோம் என்றார்.  தற்போது  வேறு எந்த முடிவையும் எடுக்க மாட்டோம், இந்த கூட்டணியில் எந்த மாற்றமுமில்லை  என்று கூறினார்.