சென்னை

ரசியல் தலைவர்கள் தங்கள் குடும்ப மருத்துவர்களின் ஆலோசனைகளை அலட்சியம் செய்ததால் ஏற்பட்ட விளைவுகள் பற்றி ஆங்கில ஏடான “அவுட்லுக்” வெளியிட்டுள்ள கட்டுரையின் சுருக்கம் இதோ :

அரசியல்வாதிகளில் பலர் குடும்ப மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றுவதில்லை.   மறைந்த முதல்வர் எம் ஜி ராமச்சந்திரன் 1984ஆம் வருடம் செப்டம்பர் மாதம் தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்த போது, மயக்கமுற்றார்.  உடனடியாக அப்போதைய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹண்டே எம் ஜி ஆரின் குடும்ப மருத்துவரிடம் அவருக்கு எப்போது ரத்தத்தின் சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது எனக் கேட்டார்.  ஆனால் அவருடைய குடும்ப மருத்துவராக பல வருடங்களாக உள்ள பி.ஆர். சுப்ரமணியன் எம் ஜி ஆர் ரத்த பரிசோதனைக்கு ஒப்புக் கொள்வதில்லை என தெரிவித்தார். அவருக்கு சர்க்கரை வியாதி இருந்தும் அவர் தாம் உடற்பயிற்சி வழக்கமாக செய்வதால் எந்த உணவையும் சாப்பிடலாம் என எண்ணி இருந்திருக்கிறார்.

தஞ்சாவூர் நிகழ்வுக்குப் பின் அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் ரத்தத்தில் சர்க்கரை அளவு தாறுமாறாக உயர்ந்திருந்தது தெரிய வந்தது.  அதன் காரணமாக அவரது சிறுநீரகங்கள் பழுதடைந்து யூரியாவும் அதிகமானது.   ஒரு மாதம் கழித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம் ஜி ஆருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவை என கண்டுபிடிக்கப்பட்டது.  அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.  அதன் பின் அவர் 1987ல் தனது 70ஆவது வயதில் மரணம் அடைந்தார்.   குடும்ப மருத்துவரின் ஆலோசனையை அலட்சியம் செய்ததின் பலனை இதிலிருந்து நாம் தெரிந்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக திமுக தலைவர் கருணாநிதியைப் பற்றி பார்ப்போம்.  தற்போது 93 வயது ஆகும் அவர், இன்று வரை தனது குடும்ப மருத்துவரான கே. கோபால் அவர்களின் ஆலோசனைப்படியே நடந்துக் கொள்கிறார்.  சக்கரநாற்காலியின் மூலம் நடமாடும் நிலை வரும் வரை அவர் தனது நடைப் பயிற்சி, யோகா ஆகியவைகளை தொடர்ந்து செய்து வந்தார்.  ”தாத்தா தேர்தல் பயணம், அலுவலகப் பயணம், சொந்தப் பயணம் என எப்படி பயணம் செய்தாலும் கோபால் தன்னுடன் வர வேண்டும் என அழைத்துச் செல்வார்.  அவருடைய ஆலோசனைப்படி ரத்த அழுத்தப் பரிசோதனையின் பின் தேவைப்பட்டால் எந்த ஒரு சந்திப்பையும் ரத்து செய்து விடுவார்” என அவருடைய பேரன் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக செல்வி ஜெயலலிதாவும் குடும்ப மருத்துவர்களாக கிருஷ்ணசாமி, ரங்கபாஷ்யம் ஆகியோரை பணியில் அமர்த்தி இருந்தாலும், அவரது தோழி சசிகலாவை மீறி அவரிடம் எந்த ஒரு ஆலோசனையையும் அவர்களால் அளிக்க முடிவதில்லை.  முதிய மருத்துவரான கிருஷ்ணசாமியின் ஆலோசனைப்படி ஜெயலலிதா இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளவில்லை.   அவருக்கு ஊசி என்றால் சிறுவயதில் இருந்தே பிடிக்காது என சசிகலாவின் உறவினரான மருத்துவர்கள் கூறி விட்டனர்.   அது மட்டுமின்றி மாத்திரைகளே போதுமானது என அவர்கள் கூறி அவருக்கு மாத்திரைகள் மட்டுமே தந்ததுடன் அவருக்கு மிக விருப்பமான சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதையும் தடை செய்யவில்லை.

ஒரு தோழியின் ஆலோசனைப்படி அக்குபஞ்சர் மூலம் ஜெயலலிதாவின் ரத்த சர்க்கரை அளவு குறைந்ததும்  அந்த மாத்திரைகளை சாப்பிடுவதையும் அவர் நிறுத்தி விட்டார்.  அதனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சரியாக நடக்கவும் முடியாமல் இருந்தார்.  முகத்தில் ஒரு களைப்பு தெரிந்ததால் அவர் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதை தவிர்த்தார்.  தேர்தல் நேரத்திலும் மிகவும் குறைந்த அளவிலேயே பொதுக்கூட்டங்களில் கலந்துக் கொண்டார்.   அதுவும் பல இடங்களில் மேடை ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வுகள் நமக்குள் உண்டாக்கும் ஒரு கேள்வி அமெரிக்காவைப் போல் இங்கும் அரசியல் பிரமுகர்கள் தங்கள் உடல்நலனை பரிசோதனை செய்துக் கொள்ளவேண்டும் என சட்டம் இயற்றினால் என்ன என்பதுதான்.  இது குறித்து தமிழக பா ஜ க தலைவரும் மருத்துவருமான தமிழிசை சவுந்தரராஜன், “நமது நாட்டில் பிரதமரும், ஜனாதிபதியும் ரெகுலராக மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார்கள்.  அதே போல ஒவ்வொரு முதல்வரும் வருடத்துக்கு ஒரு முறையாவது முழுமையான உடல் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.  அப்படி செய்துக் கொள்வதன் மூலம் ஜெயலலிதாவுக்கு நடந்தது போல குடும்ப உறுப்பினர்களால் உடல்நலக்கேடு ஏற்படுவதை தவிர்க்க முடியும்” எனக் கூறி உள்ளார்.

நன்றி : அவுட்லுக் மற்றும் ஜி சி சேகர்