மார்ச் 31 கெடு: பணம் மாற்றமுடியாமல் திணறும் பாதுகாப்புப் படையினர்!

சென்னை:

தடைசெய்யப்பட்ட ரூபாய்களை மாற்ற இரண்டுவாரங்களே உள்ள நிலையில் பணத்தை மாற்ற முடியாமல் பலர் திண்டாடி வருகின்றனர்.

பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ம் தேதி உயர்பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து ரூ 500, 1000 மதிப்புள்ள நோட்டுகள் செல்லாதவைகளாகின. டிசம்பர் 31ம் தேதி வரை செல்லாத நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஜனவரி முதல்தேதியிலிருந்து செல்லாத நோட்டுகளை ரிசர்வ் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால்   இந்தச் சலுகை வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு மட்டுமே என்று மத்திய அரசு திடீரென்று மாற்றியது.

நவம்பர் 8 க்கும் டிசம்பர் 31க்கும் இடையே மத்திய அரசு பணமதிப்பு நீக்கம் விவகாரத்தில் அடிக்கடி விதிகளை மாற்றிக் கொண்டே இருந்தது. என் ஆர் ஐ க்களுக்காக மாற்றிய விதிகள் பலருக்குத் தெரியவில்லை. அதுவும் எல்லையோரக் காவல்படையினர், காடுகளிலும் மலைகளிலும் பணியாற்றும் பயங்கரவாத தடுப்புப்பிரிவு போலீசார், ராணுவத்தினர் போன்றோரிடம் தகவல் சேராததால் பணத்தை மாற்றமுடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மத்தியப்பாதுகாப்புப் படையில் பணியாற்றும் ராஜேஸ் என்பவர், மார்ச் 31 வரை  என் ஆர் ஐக்களுக்கு மட்டும்தான் என்று மாற்றியது தனக்குத் தெரியாது என்றார். அப்போது மலைப்பகுதியில் பணியாற்றியதால் தெரியவில்லை என்றும் கூறிய அவர், இதனால் தனக்கு 9 ஆயிரம் வரை நட்டம் ஏற்பட்டிருப்பதாக கூறினார், இவரைப்போல் சியாச்சின் மலை உச்சியில் பணியாற்றிவிட்டு இப்போது விடுமுறையில் வீடு திரும்பியிருக்கும் ராணுவவீரர் மகேந்திர சிங். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர்,  தன்னிடம் இருந்த 6 ஆயிரம் ரூபாயை ரிசர்வ் வங்கிக்கு மாற்ற சென்றுள்ளார். அங்குசென்றதும்தான் மார்ச் 31 வரை என் ஆர் ஐ க்களுக்கு மட்டும்தான் என்று அவருக்குத் தெரியவந்தது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையில்  அடிக்கடி விதிகள் மாற்றியதால்  இவர்களைப்போல் பலர் லட்சக்கணக்கணக்கில் இழந்துள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published.