வாரணாசியில் வெளியாட்கள் குவிப்பு: மாயாவதி குற்றச்சாட்டு

வாரணாசி:

.உபி. மாநிலம் வாரணாசியில்  பாஜக சார்பில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, காங்கிரஸ் மற்றும் பிஎஸ்பி சமாஜ்வாதி கூட்டணியும் போட்டியிடுகிறது. அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அங்கு பாஜக வெளியாட்களை குவித்துள்ளதாக பிஎஸ்பி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம் (19ந்தேதி)  நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் ஒன்று. இங்கு மோடியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக அஜய்ராய் களமிறக்கப்பட்டு உள்ளார்.

அதுபோல பிஎஸ்பி சமாஜ்வாதி கூட்டணி வேட்பாளராக ஷாலினி யாதவ் போட்டியிடுகிறார். பாராளுமன்ற மேல்-சபையின் முன்னாள் துணை சபாநாயகர் ஷியாம்லால் யாதவின் மருமகளான ஷாலின், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாதியில் இணைந்து, தேர்தலில் போட்டியிடுகிறார்.

உ.பி.யில் சூறாவளியாக சுற்றி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டி வரும் பிரியங்கா காந்தி, மோடியின் தொகுதியிலும் தனது அதிரடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக பாஜக தலைகள் அதிர்ச்சியில் உள்ளன.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, வாரணாசி தொகுதியில் மோடியை வெற்றி பெற வைக்க வெளியாட்களை பாஜக கொண்டு வந்து குவித்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார். மேற்கு வங்கத்தில்  பாஜக நடத்தி வரும் அராஜகம் போல வாரணாசியிலும் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது என்றும், இதன் காரணமாக வாக்காளர்கள் பயத்துடன் உள்ளார்கள். இதுகுறித்து தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் எப்படி சுதந்திரமான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.