100க்கும் மேலான போலீஸார் இடைநீக்கம்- உத்தரபிரதேச அரசு நடவடிக்கை
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக அமலாக்கம் செய்யப்படவில்லை எனக்கூறி 100க்கும் அதிகமான போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அம்மாநிலத்தில் ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி அமைக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே அதிரடியாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனுமதியின்றி நடத்தப்படுவதாக கூறி மாநிலம் முழுவதும் பாரம்பரியமான இறைச்சிக் கூடங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் வேலை இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், இப்போது சட்டம் ஒழுங்கு சரியாக நடைமுறைப்படுத்தவில்லை எனக்கூறி 100 க்கும் அதிகமான போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கமாகி உள்ளனர்.
காஸியாபாத், மீரட், நொய்டா, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் இந்த நடவடிக்கைக்குப் பலியாகியுள்ளனர். இவர்களின் பெரும்பாலானவர்கள் காவலர்களாகும். லக்னோவில் மட்டும் 7 காவல் ஆய்வாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையில் இருந்த கருப்புஆடுகள் என்பதால்தான் அவர்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அம்மாநில காவல்துறை ஆணையர் ஜாவீத் அகமது தெரிவித்துள்ளார்.