மிருதி: மூதாதையர் இல்லத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் துர்கா பூஜை இம்முறை பிரணாப் முகர்ஜி இல்லாமல் நடைபெற்றது.

மேற்கு வங்கத்தின் பிர்பம் மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மூதாதையர் இல்லத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலான துர்கா பூஜை வழக்கம் போல் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த முறை அவர் மறைந்துவிட்டபடியால் பிரணாப் இல்லாமல் பூஜைகள் நடந்தன.
மத்திய அமைச்சராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ பரபரப்பான காலக்கட்டத்தில் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் பூஜை நாட்களில் கொல்கத்தாவிலிருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ள கிராமத்திற்கு அவர் வருவார். 2015ம் ஆண்டு அவரது மனைவி தவறிய போது வரவில்லை. இப்போது பிரணாப் மறைந்துவிட்டதால் அவரின்றி பூஜைகள் நடந்துள்ளன.
இது குறித்து தலைமை குருக்கள் ரபி சட்டோராஜ் கூறியதாவது: நாங்கள் மகாசப்தமி மற்றும் மகஸ்தாமி பூஜைகள் செய்து கொண்டிருந்தபோது பிரணாப்பின் வழிகாட்டுதலை இம்முறை தவறவிட்டோம். ஆனாலும் அவர் எங்களுடன் இருப்பதாக உணர்கிறேன்.
அவர் சிறு வயதிலிருந்தே ஒவ்வொரு நாளும் சில ஸ்லோகங்களை ஓதிக் கொண்டிருப்பார். பூஜையின் ஒவ்வொரு அடியையும் அவர் அறிந்திருந்தார். அவருக்கு கூர்மையான நினைவு இருந்தது என்று கூறினார்.
அவர் மேலும் கூறி இருப்பதாவது: ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் இருந்து பூஜை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும். இந்த ஆண்டு அத்தகைய அழைப்பு எதுவும் வரவில்லை என்றார்.