டில்லி

நாட்டில் உள்ள 1000 கிறித்துவ மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சைக்கு வழங்குவதாக ஒரு கிறித்துவ அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றால் இந்தியாவில் சுமார் 690க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் 16 பேர் உயிர் இழந்துள்ளனர்.  பெருகி வரும் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அனைத்து மாநில அரசுகளும் தனி மருத்துவமனைகள் அமைத்துள்ளன.  அத்துடன் ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளிலும் தனிமை வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியக் கிறித்துவ சுகாதார ஒருங்கிணைப்பு என்னும் கிறித்துவ அமைப்பு நாடெங்கும் சுமார் 1000க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை நடத்தி வருகின்றன.  இந்த மருத்துவமனைகளில் சுமார் 60000க்கும் அதிகமானோர் தங்கி சிகிச்சை பெற முடியும்.   இந்த மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சைக்கு வழங்க இந்த அமைப்பு முன் வந்துள்ளது.

இது குறித்து இந்த அமைப்பின் தலைவர் மாத்யூ ஆபிரகாம் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில், “எங்கள் அமைப்பு கொள்ளை நோயான கொரோனாவுக்கு எதிராகப் போராடுவதில் மக்களுக்கு உதவும் பணிகளைச் செய்து வருகிறது.  அமைப்பின் கீழ் உள்ள 1000க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் சுமார் 60000க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற முடியும்.

நாங்கள் இந்த மருத்துவமனைகளில் தற்போது உள்ள பேரிடர் சவாலை எதிர்கொள்ளத் தேவையான வசதிகளைச் செய்துள்ளோம்.  எனவே கோவிட் 19 என அழைக்கப்படும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை வழங்க எங்கள் மருத்துவமனைகளை அளிக்கத் தயாராக உள்ளோம்.  அதற்கான முன்னேற்பாடுகளை எங்கள் ஊழியர்கள் செய்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சீக்கிய அமைப்பான சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தங்களிடம் உள்ள மருத்துவமனைகளை கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க வழங்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.