டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் 11,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். அதன் மூலம் கொரோனா குணமானவர்களின் சதவீதம் 47.4% ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் 11,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் கடந்த 24 மணி நேரத்தில் குணம் அடைந்து விட்டதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.  மொத்தம் 11,264 பேர் குணமாகி உள்ளனர் என்று கூறி உள்ளது.
இந்த எண்ணிக்கையுடன், குணமானவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை நாடு முழுவதும் 82,369 ஐ எட்டியுள்ளது.இதனால், இதுவரை 47.40 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாட்டின் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,73,763 ஆக உயர்ந்தது. மே 30 காலை 8 மணி வரை ஒரே நாளில் 7,964 கொரோனா தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  மத்திய அமைச்சக தரவுகளின்படி, இறந்தவர்களின் எண்ணிக்கை 4,971 ஆக உயர்ந்தது.
மொத்தம் 4,971 இறப்புகளில், மகாராஷ்டிரா 2,098 இறப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. குஜராத் (980), டெல்லி (398,) மத்தியப்பிரதேசம் (334), மேற்கு வங்கம் (302), உத்தரப்பிரதேசம் (198), ராஜஸ்தான் (184), தமிழகம் (154), தெலுங்கானா (71), ஆந்திரா (60). கர்நாடகாவில் (48), பஞ்சாபில் (42), ஜம்மு காஷ்மீரில் (28), ஹரியானாவில் (19), பீகாரில் (15), கேரளாவில் 8, ஒடிசாவில் 7 பேர் இறந்துள்ளனர்.