ஜலந்தர்:

மனைவிகளை கைவிட்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்ட கணவன்களின் எண்ணிக்கை பஞ்சாப் மாநிலத்தில் 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது.


இது குறித்து சமூக நல ஆர்வலர்கள் கூறும்போது, “கேன்சர் போல இந்த பிரச்சினை பூதாகரமாகி வருகிறது. மனைவிகளை கைவிட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் எண்ணிக்கை பஞ்சாப் மாநிலத்தைப் பொருத்தவரை, 32 ஆயிரத்தை தாண்டிவிட்டது.

இது குறித்த விவரங்கள் போலீஸாரிடமோ அல்லது பாஸ்போர்ட் அலுவலகங்களிலோ இல்லை. இது தொடர்பாக அரசிடமும் தரவுகள் இல்லை.
புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதுபோன்ற குற்றம் இழைத்த கணவன்மார்களின் பாஸ்போர்ட்டை முடக்கக் கோரி ஜலந்தர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் புகார்கள் கொடுத்தோம்.

ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து புகாரை பதிவு செய்யவே போலீஸார் தாமதப்படுத்துகின்றனர்.
மேலும் ஆவணங்களை கேட்டு பாதிக்கப்பட்ட பெண்களை போலீஸார் துன்புறுத்துகின்றனர். ஆண்டுக்கு 20 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன.

மனைவிகளை கைவிட்டு வெளிநாடுகளில் செட்டில் ஆன கணவன்கள் 32 ஆயிரம் பேரின் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும்.
தங்கள் கணவன்களுக்காக 20 ஆண்டுகளிலிருந்து 40 ஆண்டுகள் வரை மனைவிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்” என்றனர்.