டில்லி:

ஆதார் தகவல்கள் சேகரிப்பு அமைப்பான உதாய் (யுஐடிஏஐடு) பொது சேவை மையங்களின் (சிஎஸ்சி) ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் முடிவை கைவிட்டதால் நாடு முழுவதும் 48 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

ஆதார் தகவல்கள் சட்ட விரோதமாக கசிந்ததை தொடர்ந்து சிஎஸ்சி ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் முடிவை உதாய் கைவிட்டுள்ளது.

இது குறித்து சிஎஸ்சி இ&நிர்வாக சேவை தலைமை செயல் அதிகாரி தினேஷ்குமார் தியாகி கூறுகையில், ‘‘ஒரு பொது சேவை மையத்தில் 3 முதல் 4 பேர் வரை பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு மையத்திற்கும் கம்ப்யூட்டர், பயோ மெட்ரிக் எந்திரங்கள், டேப்லட்ஸ் உள்ளிட்ட பொருட்கள் வாங்க ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆதார் தகவல்கள் கசிவுக்கும் இந்த மையங்ளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை’’ என்றார்.

இது குறித்து உதாய் தரப்பில் கூறுகையில், ‘‘அதிக முறைகேடு புகார், ஆதார் எண் சேர்க்கையில் விதிமீறல் போன்ற காரணங்களால் சிஎஸ்சி இ&நிர்வாகத்தின் ஒப்பந்தங்களை மீண்டும் புதுப்பிக்கும் திட்டம் இல்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் மாணவ மாணவிகளை ஆதார் அமைப்புக்குள் கொண்டு வர சிஎஸ்சி முக்கிய பங்காற்றியது. உதாய் மொத்தம் 100.19 கோடி ஆதார் எண்களை உருவாக்கியுள்ளது. இதில் 18 கோடி எண்களை சிஎஸ்சி உருவாக்கி கொடுத்துள்ளது. ஆதார் தகவல்கள் கசிவதை தடுக்க உதாய் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.