மத்திய அரசின் இணைச் செயலாளர்கள் பணிக்கு 6,000 பேர் விண்ணப்பம்

டில்லி:

மத்திய அரசின் இணைச் செயலாளர் அந்தஸ்திலான பணியிடங்களுக்கு தனியார் நிறுவன அதிகாரிகள் விண்ணப்பம் செய்யலாம் என்ற அறிவிப்பை மோடி அரசு வெளியிட்டது. இதற்கான ஆட்கள் தேர்வு அறிவிப்பை மத்திய பணியாளர் துறை சமீபத்தில் வெளியிட்டது.

வருவாய், நிதி சேவை, பொருளாதார விவகாரம், விவசாயம், விவசாயிகள் நலன், சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து, சுற்றுசூழல், வனம், பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விமான போக்குவரத்து துறை, வர்த்தக துறை உள்ளிட்ட துறைகளுக்கான அறிவிப்பு இதில் வெளியானது.

குறிப்பாக தனியார் நிறுவன அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் இப்பதவிகளில் நியமிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு பதவிக்கு அதிகபட்சமாக ஆயிரத்து 100 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். குறைந்தபட்சம் ஒரு பதவிக்கு 290 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த வகையில் மொத்தம் 6 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

நாட்டில் மொத்தம் உள்ள 6 ஆயிரத்து 500 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடங்களில் 5 ஆயிரத்து 4 பேர் பணியாற்றுகின்றனர். வழக்கமாக இணைச் செயலாளர் பணியிடங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் யுபிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.