2019ம் ஆண்டில் ரூ.4,719 கோடி மதிப்பிலான சொத்துகள் திருட்டு, 8 லட்சம் வழக்குகள் பதிவு: என்சிஆர்பி தகவல்

டெல்லி: 4,719 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை திருடப்பட்டதாகவும், 8 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த விவரங்கள் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருட்டு வழக்குகளில் 3ல் ஒரு பங்கு அல்லது 36 சதவீதத்துக்கும் அதிகமான சம்பவங்கள் குடியிருப்பு வளாகங்களில் நடந்தவையாகும்.

சாலைகள், நெடுஞ்சாலைகளில் 26 சதவீதமும், ரயில்வேயில் 7 சதவீதமும், வணிக நிறுவனங்களில் 6 சதவீதமும் குற்றங்கள் நடந்துள்ளன. நாடு முழுவதும் நாள் தோறும் சராசரியாக 800 சொத்துகள் திருடப்பட்டதாக வழக்குகள் பதிவாகி உள்ளன. அதாவது 2019ம் ஆண்டில் 2, 92, 176 வழக்குகள் பதிவாகி உள்ளன.

பதிவான சொத்து வழக்குகளில் 29 சதவீத வழக்குகள் மோட்டார் வாகனங்கள் தொடர்பான வழக்குகள் ஆகும். மொபைல் போன்கள், மடிக்கணினிகள் போன்றவை திருடப்பட்டதாக 27 சதவீதம் வழக்குகள் பதிவாகி உள்ளன. அதே சமயத்தில் 1400 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கம், நகைகள் திருடப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவில் 21 சதவீதம் மதிப்புள்ள 977 கோடி ரூபாய் சொத்துகள் திருடப்பட்டுள்ளன. அதற்கு அடுத்து டெல்லியில் 18 சதவீதமும், ராஜஸ்தானில் 7 சதவீதமும் சொத்துகள் திருடப்பட்டுள்ளன.  திருடப்பட்ட சொத்துகளில் 1451. 6 கோடி ரூபாய் சொத்துகள் மீட்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் மட்டும் 69 சதவீதம் சொத்துகள் மீட்கப்பட்டு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.