உ.பி.யில் 62 பியூன் வேலைக்கு 3700 பிஎச்டி பட்டதாரிகள் உள்பட 93ஆயிரம் பேர் விண்ணப்பம்

லக்னோ:

உ.பி. மாநில காவல்துறையில் 62 பியூன் வேலைக்கு 93ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்டிருக்கிறது என்று மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துவரும் அளவுக்கு வேலைவாய்ப்பு உருவாகவில்லை என்று ஆய்வுறிக்கைகள் குற்றம் சாட்டி வருகிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில், உ.பி. மாநிலத்தில் 5ம் வகுப்பு தகுதியே போதுமான  சாதாரண பியூன் வேலைக்கு 93 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து உ.பி. மாநில வேலைவாய்ப்புத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது,

உ.பி. மாநில காவல்துறைக்கு தேவைப்படும் 62 மெசெஞ்சர் எனப்படும் அலுவலக உதவியாளர்  பதவிக்கு 93 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாகவும், இவர்களில் 28 ஆயிரம் பேர் முதுநிலை பட்டதாரிகள் என்றும், 50ஆயிரம் பேர் பட்டதாரிகள் என்றும், 3,700 பேர் பிஎச்டி பெற்ற பட்டதாரிகள் உள்பட மற்றவர்கள் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள்  என்றும் என்று கூறி உள்ளனர்.

இவர்களில் தேவையான நபர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் எழுத்து தேர்வு நடத்தவும்  தயாராகி வருவதாக கூறி உள்ளனர். இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், சைக்கிளில்தான் செல்ல வேண்டும் என்ற அதிகாரிகள், சாதாரண பியூன் வேலைக்கு இவ்வளவு பேர் விண்ணப்பம் செய்திருப்பதற்கு காரணம்,  அரசு வேலை என்பதால் இவ்வளவு பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று கூறினர்.

மேலும், அரசு ஊழியர்களுக்கு  குறைந்த பட்ச மாத சம்பளம் ரூ.20 ஆயிரம் கிடைப்பதாலும், வேலை உத்தரவாதம் இருப்பதாலும் தற்போது அனைத்து தரப்பினரும் அரசு வேலையை விரும்புவதாகவும் கூறி உள்ளனர்.

சமீபத்தில் இந்திய ரயில்வேயில் நபடு முழுவதும்  கிட்டத்தட்ட 2 லட்சம் வேலைகளுக்கு 2 கோடி இளைஞர்கள் விண்ணப்பித்தனர். அதுபோல,  மும்பை காவல்துறையில் 1,100 கான்ஸ்டபிள் வேலைகளுக்கு டாக்டர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்களும் விண்ணப்பித்து இருந்தனர்.

சமீபத்தில் ராஜஸ்ன் மாநிலத்தில் நடைபெற்ற 393 அலுவலக உதவியாளர் பதவிக்கும், 129 பொறியாளர்கள், 23 வழக்கறிஞர்கள், ஒரு பட்டய கணக்காளர் (ஆடிட்டர்) உள்பட பலர் விணணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே  நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துள்ள அளவுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று பிரபல  கல்வி நிறுவனமான அசிஷ் பிரேம்ஜி கல்வி நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் கூறியிருந்தது. அதில்,

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 100 ஆண்களுக்கு 20 பெண்கள் மட்டுமே சம்பாதிக்கிறார்கள், தமிழகத்தில் 100 ஆண்களுக்கு 50 பெண்களும், மிசோரம், நாகாலாந்தில் 70 பெண்களும் சம்பாதிக்கிறார்கள்.

நாடு வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்டிருக்கிறது என்று மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துவரும் அளவுக்கு வேலைவாய்ப்பு உருவாகவில்லை என்றும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வேலைவாய்ப்பை உருவாக்காத வளர்ச்சியாக இருக்கும்  குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.