டெல்லி: எஸ் வங்கியின் 9 கிளைகளில் 1,919 கோடி ரூபாய் அரசு மற்றும் மக்களின் பணம் சிக்கியுள்ளதாக இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

எஸ் பேங்க் திவால் ஆனதை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி, அந்த வங்கியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இருக்கிறது. அதன் வாடிக்கையாளர்கள், ஏப்ரல் 6ம் தேதி வரை தங்கள் கணக்கிலிருந்து ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருமணம், உயர்கல்வி, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்து 5 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எஸ் வங்கியில் நிகழ்ந்த பொருளாதார அசாதாரண சூழ்நிலைக்கு தீர்வு காண ரிசர்வ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முன்னாள் அதிகாரி பிரசாந்த் குமாரை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது. அவரது தலைமையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந் நிலையில், எஸ் வங்கியின் 9 கிளைகளில் 1,919 கோடி ரூபாய் அரசு மற்றும் மக்களின் பணம் சிக்கியுள்ளதாக இமாச்சல பிரதேச முதலமைச்சர் தாக்கூர் சட்ட சபையில் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் அமர்வின் போது, அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: இமாச்சலப் பிரதேச அரசுக்கு சொந்தமான ரூ .1,900 கோடி எஸ் வங்கியில் சிக்கியுள்ளது.

இதில் பல அரசு நிறுவனங்கள் மற்றும் சாதாரண மக்கள் டெபாசிட் செய்த பணமும் அடங்கும் என்று கூறினார்.