சூரத்: எளிதில் எரியூட்ட முடியாத அளவிற்கு, குஜராத்தினுடைய 4 பிரதான நகரங்களின் சுடுகாடுகள், அதிகளவு சவங்களால் திணறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குஜராத்தில், சூரத், அகமதாபாத், ராஜ்கோட் மற்றும் வடோதரா ஆகியவை 4 முக்கியமான நகரங்களாக திகழ்கின்றன. ஆனால், அந்த மாநிலத்தில், கொரோனா பரவலின் இரண்டாவது அலை வீசும் நிலையில், கடந்த சில நாட்களாக, முக்கிய நகரங்களின் சுடுகாடுகள் கடும் நெருக்கடியை சந்தித்ததாக கூறப்படுகிறது. எளிதில் எரியூட்ட முடியாத அளவிற்கு, பிணங்கள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், மாநில அரசு, கொரோனா இறப்புகளை குறைவாக குறிப்பிடுகிறது என்பது கவனிக்கத்தக்கது. சூரத் நகரில் மட்டும் உள்ள முக்கிய சுடுகாடுகளில், கடந்த சில நாட்களாக ஒரு நாளைக்கு, சராசரியாக 80 பிணங்கள் வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதாவது, அந்நகரின் ஏகேசி சுடுகாடு, சுமாராக ஒருநாளைக்கு 35 உடல்களை மட்டுமே எரியூட்டும் வசதி கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், சில நாட்களாக அங்குவரும் பிணங்களின் ஒருநாளைய எண்ணிக்கை 110 எனும்போது, நிலைமையின் தீவிரத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

அதேசமயம், குஜராத்தில்,‍ கொரோனா மரணத்தின் உண்மை எண்ணிக்கை மறைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை, அம்மாநிலத்தின் பாஜக முதல்வர் விஜய் ரூபானி மறுத்துள்ளார்.