நம்பிக்கை வாக்கெடுப்பு பேரம்.. ஸ்டாலின் புகார் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு ஆளுநர் உத்தரவு

--

 

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களிடம் சசிகலா தரப்பு பேரம் பேசியது குறித்த ஸ்டாலின் புகார் மனு மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டசபை சபாநாயகர்  மற்றும் தலைமை செயலாளருக்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்  உத்தரவிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் அவரது அரசு வெற்றி பெற்றதாக  அறிவிக்கப்பட்டது.

 

முன்னதாக எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்கள் சென்னை கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் வைக்கப்பட்டிருந்தனர்.

அந்த நேரத்தில் எம்.எல்.ஏக்களுக்கு 10 கோடி வரை பணம், தங்கம் தருவதாக பேரம் நடந்ததாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சரவணன், கனகராஜ் ஆகியோர் பேசிய காட்சி ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது.

இதற்கிடையே மானியக் கோரிக்கைகள் தொடர்பாக சட்டசபை கூடியபோது, இந்த பேரம் குறித்து விவாதிக்க திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். இதை சபாநாயகர் ஏற்கவில்லை.

இதைத் தொடர்ந்து ஆளுநர் வித்யாசாகர் ராவை முக ஸ்டாலின் கடந்த சனிக்கிழை சந்தித்தார். அப்போது எம்எல்ஏ-க்கள் பேரம் பேசப்பட்டதால் ஜனநாயகத்துக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆகவே  அதிமுக அரசை கலைத்து விட்டு மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மனு அளித்தார்.

இந்த நிலையில் ஸ்டாலின் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்டசபை சபாநாயகர் தனபால் மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று உத்தரவிட்டுள்ளார்.

அதோடு, ஸ்டாலின் அளித்துள்ள சி.டி. ஆதாரம் குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

You may have missed