ஐதராபாத்: குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்ப்பவர்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி, பாரதீய ஜனதாவின் தவறைப் புரிய வைக்க வேண்டுமென ஆவேசமாகப் பேசினார் ஏஐஎம்ஐஎம் இயக்கத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி.

ஐதராபாத்தில் இச்சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டபோது இவர் இதை தெரிவித்தார்.

“எதிர்ப்பாளர்கள் தங்களுடைய வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வைப்பதன்மூலம், இந்தக் கருப்புச் சட்டம் எவ்வளவு தவறானது என்பதை அரசுக்குப் புரியவைக்க முடியும்.

இது முஸ்லீம்களுக்கான போராட்டம் மட்டுல்ல, தலித் மற்றும் பழங்குடி மக்களுக்குமானதுதான். இப்படி சொல்வதால் நான் துரோகியாகிவிட மாட்டேன். நான் பிறப்பால் ஒரு இந்தியன்.

அதேசமயம், மக்கள் இச்சட்டத்திற்கு எதிராக தங்களின் எதிர்ப்பை பதிவுசெய்யும்போது, வன்முறையில் ஈடுபடாமல், அமைதி மற்றும் அஹிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், அரசியலமைப்பு பாதுகாப்பு தினத்தையும் உருவாக்க வ‍ேண்டும்” என்றார் ஓவைசி.