லண்டன் :

கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையின் போது தன்னார்வலர்கள் நோய்வாய்பட்டதன் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி (ChAdOx1 nCoV-19-ன்) மருத்துவ பரிசோதனைகள் இங்கிலாந்தில் உள்ள அனைத்து மருத்துவ சோதனை நிலையங்களிலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மீண்டும் தொடங்கும்.

சோதனையின் ஒரு பகுதியாக உலகளவில் சுமார் பதினெட்டாயிரம் பேருக்கு தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டது. இது போன்று பெரிய அளவில் நடைபெறும் சோதனைகளில், சிலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போவது வழக்கமான ஒன்று தான் என்று கூறப்படுகிறது.

கடந்த ஞாயிறன்று ஆக்ஸ்போர்டு பலக்லைக்கழகத்தின் பாதுகாப்பு மறுஆய்வுக் குழு சில தரவுகளின் அடிப்படையில் உலகளாவிய இந்த சோதனையை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த மறுஆய்வு செயல்முறை முடிவடைந்துள்ளது என்றும் பாதுகாப்பு மறுஆய்வுக் குழு மற்றும் இங்கிலாந்து மருத்துவ சுகாதார ஒழுங்கமைப்பு குழு ஆகிய இரு குழுக்களின் பரிந்துரைகளைப் பின்பற்றி, இங்கிலாந்தில் மீண்டும் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளது.

எங்கள் பரிசோதனையில் பங்கேற்பவர்களின் பாதுகாப்பிற்கும், எங்கள் ஆய்வுகளில் நம்பகத்தனைமைக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், ஆகையால் பாதிப்புக்கு உள்ளான தன்னார்வலர்களின் ரகசியத்தன்மைக்கான காரணங்களுக்காக நோய் குறித்த மருத்துவ தகவல்களை வெளியிட முடியாது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

உலகளவில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை நிறுத்திய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தற்போது இங்கிலாந்தில் மட்டும் மீண்டும் பரிசோதனையை துவங்குமா அல்லது உலகளவில் அனைத்து இடங்களிலும் துவங்குமா என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.