ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி சோதனை: சென்னை மருத்துவமனைகளில் தொடங்கியது…

சென்னை:  கொரோனா பரவலை தடுக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து  பரிசோதனை சென்னையில்  மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை உள்பட தனியார் மருத்துவமனையிலும் சோதனை தொடங்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சீரம் நிறுவனம், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து  ‘கோவிஷீல்டு’ என்ற கொரோனா தடுப்பூசியை, ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த ‘கோவிஷீல்டு’  தடுப்பூசியை இந்தியாவில்,  மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிப்பதற்கான அனுமதியை சீரம் நிறுவனம் பெற்றது. இதையடுத்து, சீரம் நிறுவனத்திற்கு மனிதர்களிடம் 2ம் மற்றும் 3ம் கட்ட பரிசோதனை மேற்கொள்ள மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி, இந்தியாவில் உள்ள 17 நகரங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.  மேலும், இந்தியாவில் சுமார் 1,600 பேரிடம் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்திலும் கோவிஷீல்டு தடுப்பூசி சோதனை நடத்தப்பட உள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ராமசந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் சோதனை தடுப்பூசி பரிசோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மொத்தத்தில்,  300 பேரிடம் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த  பரிசோதனைக்கு தேவையான 300 தடுப்பூசிகள் ஏற்கனவே  சென்னை வந்தடைந்துவிட்டன,.

இதற்கிடையில்,  கோவிஷீல்டு மருந்தின் இரண்டு கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில்இ, 3வது கட்ட சோதனையின்போது,  மருந்து செலுத்தப்பட்ட நபருக்கு  உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், உடனடியாக சோதனை நிறுத்தப்பட்டது. மேலும் பக்க விளைவு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் ஆய்வு செய்த ஆக்ஸ்போர்டு,   கோவிஷீல்டு மருந்து பாதுகாப்பானது என உறுதி செய்ததால், மீண்டும் பரிசோதனை தொடங்கப்பட்டு உள்ளது.

அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை சென்னையில் தொடங்கியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ராமச்சந்திரா மருத்துவமனையில் தன்னார்வலர்களின் உடலில் மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.