இந்தியர்களுக்கு முதலில் கிடைக்கவுள்ள ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்து

புனேவைச் சேர்ந்த ஸீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட COVID-19 தடுப்பூசியைத் தயாரிப்பதற்காக அஸ்ட்ராஜெனிகாவின் உற்பத்தி ஒப்பந்தத்தில் கூட்டு சேர்ந்துள்ளது.

கடுமையான COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்து  2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முதன் முதலில் இந்தியர்களுக்கு கிடைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதாக  கூறப்படுகிறது.  இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இரு தடுப்பு மருந்துகள் இருந்தாலும், சோதனைகள் முடிக்கப்பட்டால் அவையும் சில வார இடைவெளிகளில் தயாராகலாம் என்றும்  கூறப்படுவதாக டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகாரிகளை மேற்கோளிட்டுள்ளது.  இருப்பினும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட COVID-19 தடுப்பு மருந்து மனித மருத்துவ பரிசோதனைகளில் நுழைந்த மற்ற இரண்டு நம் உள்நாட்டு  மருந்துகளை விட முன்னணியில் உள்ளதென அந்த அறிக்கை கூறுகிறது.

புனேவை மையமாகக் கொண்ட ஸீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட சாத்தியமான கோவிட் -19 தடுப்பு மருந்தைத் தயாரிப்பதற்காக பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனிகாவின் உற்பத்தி ஒப்பந்தத்தில் கூட்டாக இணைந்துள்ளது. இந்தியாவில் இம்மருந்தின் மனித மருத்துவ பரிசோதனைகளின் மேம்பட்ட கட்டங்களை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ள SII, 2 மற்றும் 3 ஆம் கட்ட  சோதனைகளைத் தொடங்கியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகளான – பாரத் பயோடெக்கின், ஐசிஎம்ஆருடன் கூட்டாக உருவாக்கப்பட்ட, கோவாக்சின்,  மற்றும் ஜைடஸ் காடிலாவின் ஜிகோவ் -டி ஆகிய இரண்டும் மனித மருத்துவ பரிசோதனைகளின் ஆரம்ப கட்டங்களில் உள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நடத்தப்பட்ட சோதனைகளிலேயே,  COVID-19 தடுப்பூசிக்காக SII நடத்தும் சோதனைகள் மிகப்பெரியவை. இது நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 17 தளங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,600 நபர்களுடன் நடத்தப்படுகிறது,  மற்ற இரண்டு தடுப்பு மருந்தின் சோதனைகளுக்கு, ஐந்து முதல் எட்டு தளங்களில் சுமார் 1,000-1,100 பங்கேற்பாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவுக்கு வெளியே உருவாக்கப்படும் பிற தடுப்பு மருந்துகளுடன் ஒப்பிடுகையில், ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து ஒரு இந்திய நிறுவனமான SII-ஐ உற்பத்தி மற்றும் விநியோக பங்காளராக வைத்திருப்பதால் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒவ்வொரு மாதமும் 100 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்துகளையும், 400 மில்லியன் டோஸ் ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்தையும் தயாரிக்க திட்டமிட்டுள்ள எஸ்ஐஐ, சமீபத்தில் தடுப்பு மருந்து வளர்ச்சி மற்றும் விநியோகத்திற்காக பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையிலிருந்து 150 மில்லியன் டாலர்களைப் பெற்றது. நாட்டில் தடுப்பு மருந்துகளின் ஆரம்பகட்ட ஆய்வுகளுக்காக GAVI – நிறுவனமும் நிதியுதவியை அறிவித்துள்ளது.

Thank you: Money Control