சென்னை: தமிழகத்திலிருந்து வேறுமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகள், தமிழக அரசின் அனுமதியின்றி அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம் குறித்து, சூ-மோட்டோ வழக்காக எடுத்து விசாரணை  நடத்திய சென்னை உயர்நீதி மன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியதுடன் தமிழகஅரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திற்கே ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள சூழலில், மத்திய அரசின் உத்தரவின் பேரில் சென்னையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.  தமிழகஅரசின் ஒப்புதலின்றி மத்தியஅரசு எடுத்துக்கொண்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து, தமிழகத்திலிருந்து ஆந்திரம் மற்றும் தெலங்கானாவுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டெஸிவிர் மருந்துகள் அனுப்பிவைக்கப்பட்டது குறித்து தாமாக முன் வந்து ( சூ-மோட்டோ வழக்கு) விசாரணைக்கு ஏற்றது சென்னை உயர் நீதிமன்றம்.

விசாரணையின்போது,  நாடு முழுவதும் கொரோனா தடுப்பு மருந்துகள், ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை‘ செய்யப்படுவது குறித்தும் கேள்வி எழுப்பியது.

பல மாநிலங்களில் கொரோனா மருந்துகள், தடுப்பூசிகள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் திண்டாடி வருகிறது என்பதை நினைவில் வைத்து, அதுபோன்ற நிலைமை தமிழகத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் பணியாற்றும்படியும் அறிவுரை கூறியது.

மேலும், தமிழகத்தில் போதிய அளவில் ரெம்டெஸிவிர் மருந்து இருப்பு உள்ளதா என்பது குறித்தும், போதிய அளவு ஆக்ஸிஜன் உள்ளதா என்று தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.