நாசிக்: மராட்டிய மாநிலம் நாசிக் ரயில் நிலையத்தில், ‘ஆக்ஸிஜன் பார்லர்’ திறக்கப்பட்டுள்ளது. தூய்மையான பிராண வாயுவை பயணிகள் சுவாசிப்பதற்கான ஒரு தனியான காற்று அறைதான் இந்த ஆக்ஸிஜன் பார்லர்.

‘ஏரோ கார்டு’ என்ற தனியார் நிறுவனத்தின் உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரயில் பயணிகளுக்கு தூய்மையான காற்று கிடைக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கடந்த 1989ம் ஆண்டு, காற்றில் உள்ள துங்குதரும் அம்சங்களை உறிஞ்சிக்கொள்ளக்கூடிய 5 தாவர வகைகளைக் கண்டறிந்தனர் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள். எனவே, அந்த தாவரங்களைக் கொண்டு, நாசிக் ரயில் நிலையத்தின் ஆக்ஸிஜன் பார்லர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 1500க்கும் மேற்பட்ட தாவரங்கள் இந்த சிறப்புப் பண்பைக் கொண்டனவாம். எனவே, படிப்படியாக அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த திட்டத்தை விரிவாக்க உள்ளனராம். ரயில் நிலையங்கள் மட்டுமின்றி, வீடுகளிலும் இவற்றின் மூலம் தூய்மையான காற்று கிடைக்க வழிவகைகள் செய்யப்படும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த திட்டத்தை நாசிக் ரயில் நிலைய பயணிகள் வரவேற்றுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தண்ணீர் பெரிய வணிகமாகும் என்று கூறப்பட்டுவரும் நிலையில், ஆக்ஸிஜன் வணிகமும் பெரியளவில் கொடிகட்டிப் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.