டெல்லி: தடுப்பூசி மருந்துகள், ரெம்டெசிவிர் மருந்து , ஆக்சிஜன் பற்றாக்குறை போன்றவற்றுக்கு மோடி அரசின் மோசமான திட்டமிடலே காரணம், இது மோடி அரசின் தோல்வி என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி  குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கி உள்ளது. மேலும், அதிகரித்து வரும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதி கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத நிலையில், தற்போது ஆக்சின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இது மக்களிடையே மோடி அரசின் மீது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், கொரோனா விவகாரத்தில் மோடி அரசின் தவறான திட்டமிடல் காரணமாகவே அனைத்திலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரியங்கா அளித்துள்ள பிரத்யேக பேட்டியில்,  ஆக்சிஜன் உற்பத்தியில் உலகிலேயே இந்தியாதான் மிகப்பெரிய உற்பத்தி திறன் கொண்ட நாடு. அப்படி இருக்கும்போது,  நம் நாட்டில் ஏன் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. கொரோனா பரவலின் முதல் அலை மற்றும் 2வது அலைகளுக்கு இடையே 8 – 9 மாதங்கள் இடைவெளி இருந்த நிலையில், அதை மோடி அரசு புறக்கணித்துள்ளது,  கொரோனா தொற்று தடுப்பு குறித்து தகுந்த திட்டமிடல் இல்லாததே,  ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது.

இன்று, இந்தியாவில் 2000 லாரிகள் மட்டுமே ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல முடியும் நிலையில் உள்ளது. ஆனால், அது எங்கும் குறிப்பிட்ட காலத்தில் சென்றடையவில்லை. நோயாளிகளுக்கு தேவையான  ஆக்ஸிஜன் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்  எவ்வளவு துயரமானது,

அதுபோல, கொரோனா நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தாக ரெம்டெசிவிர் கொடுக்கப்படுகிறது. அந்த மருந்தையும் வெளிநாடுகளுக்கு மோடி அரசு ஏற்றுமதி செய்துவிட்டது.  கடந்த 6 மாதங்களில் 1.1 மில்லியன் ரெம்டெசிவிர் ஊசி ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால், இன்று நமது மக்களுக்கு ரெம்டெசிவிர் கிடைக்காத நிலை உருவாகி உள்ளது, நாம் பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம்.

மற்றும் கொரோனா தடுப்பூசியிலும் மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது. நமது மக்களுக்கு தேவையான தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், மோடி அரசு ஜனவரி-மார்ச் மதத்தில் சுமார்  6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால், நமது மக்களில்  3-4 கோடி பேருக்கு மட்டுமே  தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்படுவதில் இந்தியர்கள் ஏன் முன்னுரிமை கொடுக்கப்படவில்லை?

மோசமான திட்டமிடல் காரணமாகவும், சரியான திட்டமிடல் இல்லாததால் ரெம்ட்சிவிர் பற்றாக்குறை, மூலோபாயம் இல்லாததால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி ஏற்றுமதி காரணமாக தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது மோடி  அரசாங்கத்தின் தோல்வி.

இவ்வாறு அவர் கூறினார்.