ஆக்ஸிஜன் பற்றாக்குறை – அளவில்லாமல் போன மோடி அரசின் அலட்சியம்!

புதுடெல்லி: கொரோனா பரவலின் இரண்டாவது அலை, நாட்டை அல்லகோலப்படுத்திவரும் நிலையில், மாவட்ட மருத்துவமனைகளில், ஆக்ஸிஜன் உற்பத்தி பிளான்ட்டுகளை நிறுவுவதற்கான ரூ.200 கோடி டெண்டரை விடுத்துள்ளது மோடி அரசு.

கொரோனா முதல் அலை ஓய்ந்த பிறகு, 8 மாதங்களை வீணடித்து, இப்படியானதொரு தாமத நடவடிக்கையை மோடியின் அரசு மேற்கொள்வது தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக காங்கிரஸ் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பிரியங்கா காந்தி கூறியுள்ளதாவது, “ஒருநாளைக்கு இந்தியாவில் 7500 மெட்ரிக் டன்கள் அளவிற்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்தவகையில், உலகளவில் ஆக்ஸிஜனை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முக்கிய இடம் வகிக்கிறது.

ஆனால், அந்த ஆக்ஸிஜனை தேவையான இடங்களுக்கு கொண்டு செல்வதில் நிலவும் போக்குவரத்து இடர்பாடுகள்தான், இன்றைய உயிரிழப்புகளுக்கு காரணம். அரசாங்கம் அந்த விஷயத்தில் தோல்வியடைந்துள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கும் என்பது தெரிந்திருந்தும் எதற்காக இந்த அலட்சியம்? நிறைய அவகாசம் இருந்ததே. இப்போதும்கூட எல்லாம் முடிந்துபோய்விடவில்லை. மோடிஜி அவர்களே, தயவுசெய்து இப்போதாவது தேவையானதை செய்யுங்கள்.

உங்களிடம் இருக்கும் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, ஆக்ஸிஜனை, தேவையான இடங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை முடுக்குங்கள். மக்கள் இறந்து கொண்டுள்ளார்கள். ஒவ்வொரு உயிரும் முக்கியமானது” என்றுள்ளார் பிரியங்கா.

கொரோனா இரண்டாவது அலை உறுதியாக எதிர்பார்க்கப்பட்டும், மோடியின் அரசு, எதைப்பற்றியும் கவலையில்லாமல்தான் இருந்துள்ளது என்பதற்கான சான்று, இந்த 2021ம் ஆண்டில் மட்டும், இதுவரை, 9300 மெட்ரிக் டன்கள் அளவிற்கு ஆக்ஸிஜனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது இந்தியா.

இது, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்காகும். அதிகளவிற்கு வங்கதேச நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, ஆக்ஸிஜனை இறக்குமதி செய்வதற்கான டெண்டருக்கு அழைப்பு விடுத்துள்ளது மோடி அரசு.