உலகின் வியத்தகு நிகழ்வாக, எப்படி தானாகவே உருவானதோ, அதைப்போலவே, உலகின் மிகப்பெரிய அந்த ஓசோன் துளை தானாகவே சரியாகியுள்ளது. ஆர்க்டிக் பிரதேசத்தின் மீது உருவாகியிருந்த இந்த ஓசோன் துளை இப்போது இல்லை. கடந்த வசந்த காலத்தின் தொடக்கத்தில் முதன் முதலில் கண்டறியப்பட்ட இது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இதை கண்காணித்து வந்த கோப்பர்நிக்கஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவை (CAMS) மைய விஞ்ஞானிகள் இந்த துளை கடந்த வாரம் மூடப்பட்டு விட்டதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் சார்ந்த ஊரடங்கு மற்றும் கட்டுபாடுகள் காற்று மாசுபாட்டைக் கணிசமாகக் குறைக்க வழிவகுத்த போதிலும், ஓசோன் துளை மூடியதற்கும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். “உண்மையில், COVID-19 மற்றும் அதனுடன் தொடர்புடைய ஊரடங்கு முடக்கத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று CAMS ஞாயிற்றுக்கிழமை ட்வீட் செய்தது. “இது வழக்கத்திற்கு மாறாக வலுவான மற்றும் நீண்டகால துருவங்களின் சுழற்சியால் நிகழ்ந்துள்ளது. காற்றின் தரம் குறித்த மாற்றங்களுடன் தொடர்புடையது அல்ல.” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது தீவிர துருவ சுழற்சி முடிந்துவிட்டதால், ஓசோன் துளை மூடப்பட்டுள்ளது. இதுபோன்றதொரு நிகழ்வு மீண்டும் ஏற்படுமா எனத் தெரியவில்லை என கூறியுள்ளனர்.
நாசாவின் சமீபத்திய ஆய்வு முடிவுகளின்படி,  ஆர்க்டிக்கிற்கு மேலே ஓசோன் படலத்தின் அடர்த்தி மிகக் குறைந்த அளவை எட்டியது. இந்த வகையான “கடுமையான” ஓசோன் சிதைவு நிச்சயமாக அசாதாரணமானது ஆகும். இதற்கு முன், 1997 மற்றும் 2011 ஆண்டுகளில் இதே போன்றதொரு ஓசோன் சிதைவை கண்டறிந்து பதிவு செய்திருந்தனர். குளோரோஃப்ளூரோ கார்பன்கள் எனப்படும் மனிதனால் உருவாக்கப்பட்ட இரசாயனங்கள் கடந்த நூற்றாண்டில் இருந்து ஓசோன் படலத்தை கடுமையாக பாதித்து வருகின்றன. 1980 களில் நாம் எப்போதும் குறிப்பிடும் ஓசோன் துளை அண்டார்டிகாவின் மேற்பகுதியில் உள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டது. வளிமண்டலத்தில் நிகழும் அசாதாரண நிலைகளாக வல்லுநர்கள் இதை சுட்டிக் காட்டினர். மேலும், இது தொழில்துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் பல்வேறு இரசாயனங்கள் அசாதாரணமாக குறைந்த வெப்பநிலையில் அதிக உயரத்தை எட்டி, ஓசோன் வாயுவை சிதைக்கும் தன்மைக் கொண்டது என்பதும் இதற்கு பெரும் காரணமாக அமைந்தது.

“இந்த ஆண்டின் நிகழ்ந்துள்ள ஓசோன் அடர்த்திக் குறைவு பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மிக அரிதாக நடக்கும் நிகழ்வு” என மேரிலாந்து, கிரீன் பெல்ட்டில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையத்தில் பூமி அறிவியலின் முதன்மை விஞ்ஞானி பால் நியூமன் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார். “ஓசோன் அடுக்கின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஆர்க்டிக் ஓசோன் அளவு பொதுவாகவே அதிகமாக இருக்கும் என்பதால் இந்த நிகழ்வு சாத்தியப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
இந்த மாத தொடக்கத்தில், ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் விஞ்ஞானிகள், ஓசோன் படலத்தில் கிரீன்லாந்தைப் போல மூன்று மடங்கு அளவுக்கு பெரிதான ஒரு துளை உருவாகியுள்ளதாக கண்டறிந்தனர். மேலும் புவியின் வெப்பநிலை அதிகரிக்கும் போது இது இது தானாகவே சரியாகலாம் என்றும் கணித்திருந்தனர். அவர்களும் எதிர்பார்ப்பைப் போலவே, ஆர்க்டிக் துருவ சுழற்சி மாறுபாடு காரணமாக,  ஓசோன் அழு குறைவான மேலடுக்கு வளிமண்டலம், ஓசோன் நிறைந்த கீழடுக்கு வளிமண்டல காற்றுடன் கலக்க அனுமதித்தது. அண்டார்டிகாவின் மீது உருவாகியிருந்த ஓசோன் படலத் துளை மனித குலத்தின் ஆரோக்கியத்திற்கே சவால் விடும் வல்லமைக் கொண்டது. ஆனால், 1987 ஆம் ஆண்டில் 197 நாடுகள் ஓசோன் படலத்தின் பாதுகாப்புக் கருதி  குளோரோஃப்ளூரோ கார்பன்கள் போன்ற இரசாயனப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் மாண்ட்ரீல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதுவும் அண்டார்டிகாவில் உருவாகியிருந்த துளையின் அளவு குறைவதற்கு பெரும் பங்காற்றியது. “இந்த ஆண்டு ஓசோன் படல அடர்த்தி குறைவிற்கான காரணம் என்னவென அறிய முடியவில்லை,” என்று நியூமன் கூறினார். “ஆனால் மாண்ட்ரீல் ஒப்பந்தப்படி வளிமண்டலத்தில் குளோரோஃப்ளூரோ கார்பன்களை வளிமண்டலத்தில் கலக்கவிருந்ததை நாம் நிறுத்தியிருக்காவிடில், இந்த ஆண்டு ஆர்க்டிக்கின் ஓசோன் அடர்த்தி குறைவு மிகவும் மோசமாக இருந்திருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்.” என்று கூறினார்.
இதுமட்டுமின்றி, கொரோனா உலகையே அச்சுறுத்தி வந்தாலும், அதையொட்டி நடைபெறும் நல்லவிதமான சுற்றுப்புற சூழல் மாற்றங்கள் குறித்து பல தகவல்கள் உலகம் முழுவதிலும் இருந்து வெளிவந்து கொண்டுள்ளது. இதில் இருந்து நாம் அறிவது என்னவெனில், இயற்கை தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டுள்ளது !!!
ஆங்கில மூலம்: ஷோஃபி லூயிஸ்
தமிழில்: லயா