டெல்லி:
பணமதிப்பிறக்க முடிவு எடுக்கப்பட்ட போது ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் கூட்டத்தில் பதிவான விபரங்களை வெளியிட வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் இன்று கூறியிருப்பதாவது:
கடந்த நவம்பர் 8ம் தேதி அன்று உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு சில நடைமுறைகளை மத்திய அரசு பின்பற்றியிருக்க வேண்டும்.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் இயக்குனர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கும். இந்த விவாத விபரங்கள் மினிட் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவ்வாறு மினிட் புத்தகத்தில் பதிவான விபரங்களை மத்திய அரசு பொதுமக்கள் அறியும் வண்ணம் வெளியிட வேண்டும்.
அதேபோல் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறுவதற்காக வைக்கப்பட்ட குறிப்பு விபரங்களையும் வெளியிட வேண்டும்.இயக்குனர்கள் கூட்டத்தில் என்ன பொருள் விவாதத்துக்கு வைக்கப்பட்டது என்பதை நான் அறிய விரும்புகிறேன். பரிந்துரையாக வைக்கப்பட்டது எப்படி முடிவாக ஏற்கனவே காத்திருந்த மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.