106 நாட்களுக்கு பிறகு வெளியே வந்த ப.சிதம்பரம்: சோனியாவுடன் சந்திப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் 106 நாட்களாக சிறையில் இருந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று இன்று வெளியே வந்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த வழக்கில் 106 நாட்களாக டில்லியில் உள்ள திகார் சிறையில் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு உடல்நலம் சரியில்லை என்றும், பல்வேறு காரணங்களை எடுத்துக்கூறியும் விசாரணை நீதிமன்றமும், டில்லி உயர்நீதிமன்றமும் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டன. இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு மீது இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், டில்லி உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்த விதம் தவறாக இருப்பதாகவும், ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை என்பதால், நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுவதாகவும் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, விசாரணை நீதிமன்றத்தில் 2 லட்சம் ரூபாய் சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கான இரு நபர்கள் ஜாமீனில் ப.சிதம்பரத்தை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து டில்லி திகார் சிறையில் இருந்து இரவு 8 மணிக்கு வெளியே வந்த ப.சிதம்பரத்திற்கு, காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிழும் காங்கிரஸ் தொண்டர்களின் உற்சாக வரவேற்பை பெற்ற அவர், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தேசிய தலைவரான சோனியா காந்தியை தற்போது ப.சிதம்பரம் சந்தித்து வருகிறார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், “நாட்டின் பொருளாதாரம் என்ன நிலையில் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம். நிச்சையமாக அதுபற்றி நாளை நான் பேசுவேன்” என்று தெரிவித்தார்.