ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில், 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அவரை திகார் சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 21ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, கடந்த 15 நாட்களாக விசாரிக்கப்பட்டு வந்தார். சமீபத்திய உச்சநீதிமன்றத்தின் அறிவுறையின் படி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ தரப்பு வாதம் செய்தது. அவ்வாறு கொடுத்தால் ஆதாரங்களை அவர் அழித்து விடுவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் சிதம்பரம் தரப்பில், தனக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இல்லாத நிலையில் தான் எந்த ஆதாரத்தையும் அழித்து விட முடியாது என்று வாதிடப்பட்டது. மேலும் தனது வயதை கருத்தில் கொண்டு திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்று அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி, ப.சிதம்பரத்தை 14 நாட்கள் நீதிமன்ற காவலில், வரும் 19ம் தேதி வரை திகார் சிறையில் அடைத்து வைக்க உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து திகார் சிறையில், அறை எண் 7ல் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டார்.

வரும் 16ம் தேதி ப.சிதம்பரத்தின் 74வது பிறந்தநாள் வர உள்ள நிலையில், 19ம் தேதி வரை அவர் சிறையில் இருக்கவேண்டிய சூழல் உள்ளதால், தனது பிறந்தநாளன்று சிறையில் நாளை கடக்க ப.சிதம்பரம் நிர்பந்திக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.