பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தால் வங்கிகளுக்கு ஏன் மறுமுதலீடு?!! ப.சிதம்பரம் கேள்வி

டில்லி:

நாட்டின் பொருளாதாரம் வலுவான நிலையில் இருக்கிறது என்றால் ரூ. 6 லட்சம் கோடி மதிப்பிலான பாரத்மாலா திட்டம் மற்றும் வங்கிகளுக்கு மறு முதலீடு ஆகியவற்றை மத்திய அரசு வழங்கியது ஏன்? என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘கடந்த 2014ம் ஆண்டில் இருந்து படிப்படியாக கீழ் நோக்கி வந்த பொருளாதாரம் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி.யால் முற்றிலும் அழிந்துவிட்டது. 2004 மற்றும் 2009ம் ஆண்டுகளில் பொருளாதாரம் 8.5 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. இது தான் தற்போது வரை சிறந்த வளர்ச்சியாக உள்ளது. இந்த வளர்ச்சி 2014ம் ஆண்டு முதல் இறங்க தொடங்கியது. பொருளாதாரம் நல்ல முறையில் இருக்கிறது என்றால் ரூ. 6 லட்சம் கோடி மதிப்பிலான பாரத்மால திட்டம் எதற்கு? வங்கிகளுக்கு மறு முதலீடு எதற்காக செய்யப்பட்டது.

பணமதிப்பிழப்பால் தான் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இங்கு வெள்ளை பணம், கறுப்பு பணம் என்று எதுவும் கிடையாது. ரூபாய் நோட்டுகளின் நிறம் கறுப்பு கிடையாது. பழைய ரூபாய் நோட்டுக்களை போல் தான் உள்ளது. பணமதிப்பிழப்பினால் எந்தவிதமான நோக்கத்தையும் அடையவில்லை. அவர்களால் எந்தவித கறுப்பு பணத்தையும் பிடிக்க முடியவில்லை’’ என்றார்.

ப.சிதம்பரம் தொடர்ந்து கூறுகையில், ‘‘பணமதிப்பிழப்பு சிறு மற்றும் நடுத்த தொழில்களை அழித்துவிட்டது. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. பெரிய தொழில்களும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. இதை தான் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செய்து வந்தன. பணமதிப்பிழப்பில் இருந்து நாடு மீழ்வதற்குள் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டுவிட்டது. இதில் பலதரப்பட்ட வரி விதிப்பு வகிதாச்சாரங்கள் உள்ளது. உள்ளது. இது ஜிஎஸ்டி.யே கிடையாது. தயவு செய்து இதை வேறு பெயர் கூறி அழையுங்கள்.

பொருளாதாரம் தற்போது மாறும் நிலைப்பாட்டில் உள்ளது. சரியான நடவடிக்கைகளை எடுத்தால் மேல் நோக்கி செல்ல முடியும். தவறான முடிவுகள் எடுக்கப்பட்டால் கீழ் நோக்கி தான் செல்லும். வளர்ச்சி விகிதம் 5.7 சதவீத்திற்கு கீழ் செல்லக் கூடாது. இந்தியா இந்த நிலையில் இருந்து கீழ் நோக்கி செல்லக் கூடாது. இந்த நாட்டு மக்கள் சரியான நடவடிக்கையை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எதிர்காலத்தில் வரும் அரசாங்கம் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், மற்ற நாடுகளை போல் இந்தியாவிலும் நிழல் பொருளாதாரம் இருக்கிறது. இது 12 சதவீதம் என்ற அளவில் உள்ளது. நிழல் பொருளாதாரத்திற்கு தீர்வு சிறந்த வரி விதிப்பு முறைதான். பணமதிப்பிழப்பு கிடையாது. மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொழுத்த முடியாது. உயர் மதிப்புடைய பரிமாற்றங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும். வர்த்தகர்களை கார்டு மூலம் பணம் பெற கட்டாயப்படுத்த முடியாது. கடந்த நவம்பர் மாதத்தில் டிஜிட்டல் பரிமாற்றத்தின் மதிப்பு ரூ. 94 லட்சம் கோடி. கடந்த ஜூன் மாதத்திலும் இதே மதிப்பு தான் உள்ளது.

காங்கிரஸ் ஆட்சியின் போது 2005&06ம் ஆண்டில் வாட் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இதற்கு எதிராக போராட்டம் நடக்கவில்லை. ஏன் என்றால்? இதை தயாரிக்க நாங்கள் கடினமாக உழைத்தோம். சிறு தொழில்கள் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நடுத்தர தொழில்கள் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். எனினும் அவற்றுக்கு சுய சான்றிதழ் அளிக்கும் உரிமை வேண்டும். ஜிஎஸ்டி.யில் எந்த சூழ்நிலையிலும் இதன் வரி விதிப்பு 18 சதவீத்திற்கு மேல் இருக்க கூடாது’’ என்றார்.

‘‘ஜிஎஸ்டி தவறான ஆலோசனை என்று மக்கள் தற்போது கூறுகின்றனர். ஜிஎஸ்டி தவறான ஆலோசனை கிடையாது. இதன் சட்டம் தான் தவறான சட்டமாக இருக்கிறது. புல்லட் ரெயில் திட்டத்திற்கு ரூ. 1 லட்சம் கோடி செலவிடுவதற்கு பதிலாக, ஏன் ஒரு பள்ளிக்கு ரூ. 1 கோடி அளிக்க கூடாது?. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு தான் நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

எத்தனை பேர் புல்லட் ரெயிலில் பயணிக்க போகிறார்கள். அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஒரு அரசியல் கட்சி ஒரு சமுதாயத்திற்காக மட்டும் சத்தமாக குரல் கொடுத்துவிட்டு, இதர சமுதாயத்திற்கு மெல்லிய குரலை பயன்படுத்தக் கூடாது’’ என்று சிதம்பரம் குறிப்பிட்டார்.