புதுடெல்லி:
ஜி.எஸ்.டி. வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட மாநிலங்களுக்காக மத்திய அரசு கடன் வாங்கும் முடிவுக்கு ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மாநில அரசுகளுக்காக மத்திய அரசு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் நேற்று டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-

ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 208 கோடியை மத்திய அரசு கடன் வாங்கி, மாநில அரசுகளுக்கு (‘பேக் டூ பேக் லோன்’) வழங்கும் என நிதி மந்திரி, மாநிலங்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அவரது இந்த மனமாற்றத்தை வரவேற்கிறேன்.

ஆனால் ஜி.எஸ்.டி. இழப்பீட்டில் உள்ள இடைவெளியின் மீதி குறித்து எந்த தெளிவும் இல்லை. நிதி மந்திரியின் கடிதம் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 830 கோடி, நடப்பு நிதி ஆண்டுக்கானது என சொல்கிறது. கடன்களை வாங்குவது யார் என்பதில் தெளிவு இல்லை. இந்தக் கடன்கள் எவ்வாறு திருப்பிச்செலுத்தப்படும் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

சரியான முதல் படியை எடுத்துள்ள நிலையில், இரண்டாவது படியையும் எடுத்து, மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையேயான நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறி உள்ளார்.