சிபிஐக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தொடுத்துள்ள வழக்கு இன்றைய விசாரிக்கப்படும் வழக்குகளுக்கான பட்டியலில் சேர்க்கப்படாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2007-ம் ஆண்டில், மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியது. இதற்கு, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இதைத் தொடர்ந்து, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் தாக்கல் செய்தார். முன்ஜாமீன் மனுவை நீதிபதி சுனில் கவுர் தள்ளுபடி செய்திருந்தார். வழக்கின் தீவிரத்தன்மை சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் ரத்துக்கு காரணமாக சொல்லப்பட்டது. முன்ஜாமீன் கிடைக்காததால் சிதம்பரம் எந்தநேரமும் கைது செய்யப்படுவார் என்ற தகவலும் பரவிய நிலையில், கடந்த 21ம் தேதி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு, 22ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஆகஸ்ட் 26ம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்றுடன் சிதம்பரத்திற்கான காவல் முடிவடையும் நிலையில், இது தொடர்பான வழக்கு இன்றைக்கு விசாரிக்கப்படும் வழக்குகளின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இது தொடர்பாக நீதிபதி பானுமதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முறையிட்டபோது, “தலைமை நீதிபதி உத்தரவிட்டால் மட்டுமே வழக்கு பட்டியலிடப்படும்” என்று நீதிபதி பானுமதி விளக்கமளித்தார்.

அதேநேரம், சிபிஐக்கு எதிரான வழக்கின் மீது வாதம் வைக்கவேண்டுமானாலும், அதையும் எதிர்கொள்ள அரசு தரப்பு தயாராக இருப்பதாக வழக்கறிஞர் துஷர் மேத்தா தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம் தொடர்ந்துள்ள இந்த வழக்கு இன்றைய விசாரணை வழக்குளின் பட்டியலில் சேர்க்கப்படாத நிலையில், தலைமை நீதிபதியிடம் முறையிட கபில் சிபல் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.