டில்லி

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்  ப சிதம்பரம் தன்னுடன் நடந்த விசாரணையின் தமிழாக்கத்தை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐ என் எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடு பெற வரம்பு மீறி சலுகை அளித்ததாக முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையொட்டி நடந்த விசாரணைக்கு அவர் வராததால் அவரை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கப்பிரிவு உத்தரவிட்டது.

முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் முன் ஜாமீன் கோரி அளித்த மனுவை டில்லி  உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அதனால் சிதம்பரம் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.அமலாக்கத்துறை ஏற்கனவே கடந்த வருடம் டிசம்பர் 19 மற்றும் இந்த வருடம் ஜனவரி 1 மற்றும் ஜனவரி 21 ஆகிய தேதிகளில் சிதம்பரத்திடம் விசாரனை நடத்தி உள்ளது. இந்த மூன்று நாட்கள் விசாரணையின் தமிழாக்கத்தைக் கோரி சிதம்பரம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்கறிஞர் கபில்சிபல் இந்த தமிழாக்கம் மூலம் சிதம்பரம்  அமலாக்கத்துறை விசாரணையின் போது எந்த அளவு ஒத்துழைத்தார் என்பது தெரிய வரும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மற்றொரு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி அரசியலமைப்பு சட்டப்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் தன்னிடம் நடக்கும் விசாரணை குறித்து அறிந்துக் கொள்ளவும் அதில் உரிமை மீறல் ஏற்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துக் கொள்ளவும் அதிகாரம் உண்டு எனத் தெரிவித்துள்ளார்.