பட்டாக்கத்திகளுடன் மோதிய கல்லூரி மாணவர்களில் 2 பேர் டிஸ்மிஸ்! பச்சையப்பா கல்லூரி முதல்வர் தகவல்

சென்னை:

சென்னையில் நேற்று முன்தினம் (23ந்தேதி) பட்டப்பகலில் பட்டாக்கத்தியுடன் பச்சையப்பா கல்லூரி  மாணவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்ட நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், 2 மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளதாக பச்சையப்பன் கல்லூரி முதல்வர் விளக்கம் அளித்து உள்ளார்.

தமிழகத்தில், குறிப்பாக  சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார கல்லூரி மாணவர்களிடையே, ரூட் தல என்ற பெயரில் யார் தலைவர் என்ற பெயரில் அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகிறது. சமீப ஆண்டுகளாக இந்த மோதல்கள் கத்தி, கட்டைகளுடன் வன்முறையாக மாறி வருகிறது. இதை ஒடுக்க வேண்டும் என்று காவல்துறை யினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், இதுவரை கண்டுகொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாணவர்கள் பட்டாக்கத்தி மோதல் சென்னை மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களின் கொட்டத்தை அடுக்கி ஒடுக்க வேண்டும் என்று கடுமையாக காவல்துறைக்கு குரல் கொடுத்து வருகின்றனர்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், 2 மாணவர்களை மட்டுமே கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருவதாக கூறி வருகின்றனர்.

இதுபோன்ற கொடூர செயல்களை செய்யும் மாணவர்களை தங்களது கல்லூரியில் சேர்த்துள்ள,  பச்சயப்பன் கல்லூரி முதல்வர், அருள் மொழிச்செல்வன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

அப்போது, ” மாணவர்கள் இது போன்றக் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு அவர்களது குடும்ப சூழலே காரணம் என்று, அவர்களது குடும்பத்தினர் மீது சுமையை இறக்கினார். மேலும், வன்முறையில் ஈடுபட்ட 2 மாணவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும்,  சம்பந்தப்பட்ட மற்ற மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம் என்று கூறி உள்ளார்.

இத்துடன், இனிமேல், இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு கண்காணிக்கப்படும் என்றவர்,  குற்றச் செயல்களைத் தடுக்க உயர்மட்ட ஆசிரியர் குழு ஒன்றை நியமித்து இருப்பதாகவும்,  அந்த குழு ஆய்வு செய்து கொடுக்கும் அறிக்கையை கொண்டு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்

கல்லூரி வளாகத்தினுள் எவ்வித அசம்பவித சம்பவமும் நடைபெறவில்லை என்று கூறியவர், பச்சையப்பன் கல்லுரி பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யாரேனும் நடந்துக் கொண்டால் அவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு கூறினார்.

கல்லூரி முதல்வரின்  பேட்டி கண்துடைப்பு என்றும், இடைநீக்கம் என்பது பொதுவான நடவடிக்கை என  பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கத்தியை பிடித்த மாணவர்கள் இனிமேல் கல்வியை தொடர முடியாதவாறு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.