சென்னை: மத்தியஅரசு தனக்கு வழங்கிய  பத்ம விருதுகளைத் திருப்பி அளிக்கவில்லை என்ற இசையமைப்பாளர் இளையராஜா விளக்கம் அளித்துள்ளார்.

பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில், அவரது விருதுகள் உள்பட அவரது பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனால், கடுமையான  அதிருப்தியில் இருந்து வருகிறார் இளையராஜா, இந்த நிலையில்,  இசைஞானி  இளையராஜா, தனக்கு மத்தியஅரசு வழங்கி கவுரவித்த  பத்ம விபூஷண் விருதை திருப்பி அளிக்கவுள்ளதாக தகவல்கள் பரவின.

இந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து இளையராஜா வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,  ‘பேரன்புக்குரியவர்களே! நான் சொல்லாத ஒரு கருத்தை, ஒரு தனிப்பட்ட நபருடைய கருத்தை நான் சொன்னதாக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறு என்பதை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அப்படியொரு கருத்தை நான் வெளியிடவே இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

முன்னதாக,  இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தினா பத்திரிகையாளர்களைச் சந்திதபோது,  “தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நிலை இசைஞானிக்கு ஏற்பட்டிருக்குமா? நாங்கள் தற்போது பாதுகாப்பற்ற அநாதைகளாக இருப்பதாக உணர்கிறோம். 50 ஆண்டு காலம் இந்திய சினிமாவுக்குத் தன் இசைப் பணியால் சர்வதேச அளவில் கவுரவத்தைப் பெற்றுத் தந்த இளையராஜா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதன் காரணமாக மத்திய அரசு வழங்கிய பத்ம விபூஷண் விருதைச் சங்கத்தின் மூலமாகத் திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் அந்த அளவுக்கு மனமுடைந்துள்ளார்” என்று பேசியிருந்தார்.
இதையடுத்து, இளையராஜா விளக்கம் அளித்துள்ளார்.