திருவனந்தபுரம்

பாடகர் ஏசுதாஸ் பத்மநாப சாமி கோயில் வர தடை ஏதும் இல்லை என கோயில் அதிகாரி தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞரும்,  பல மொழித்திரைப்படங்களில் பல பாடல்களை பாடியவரும் ஆன கே ஜே ஏசுதாஸ்,  கேரளாவை சேர்ந்த கிறித்துவர் ஆவார்.  அவர் கிறித்துவராக இருப்பினும் இந்து மதத்திலும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்.  இவர் பாடிய ஹரிவராசனம் தான் இப்போதும் சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் தாலாட்டு பாடலாக ஒலிபரப்பப் படுகிறது.  மத பேதமின்றி அனைவரும் இவரை தாஸண்ணா என அழைத்து வருகின்றனர்.

இவருக்கு கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோயிலில் தரிசனம் செய்ய வெகு நாட்களாக எண்ணம் இருந்தது.   அதனால் தான் இந்து மதத்தின் மேல் பூரண நம்பிக்கை உள்ளவர் என்றும் தன்னை கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் சமீபத்தில் ஒரு கடிதம் அனுப்பினார்.  ஏற்கனவே தாம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கும் மூகாம்பிகை கோயிலுக்கும் அடிக்கடி செல்வதையும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு கோயில் அதிகாரியான ரதீசன் ஐ ஏ எஸ் பதிலளித்துள்ளார். அதில், “கோயில் வழக்கப்படி இந்து மதக் கோட்பாடுகளில் நம்பிக்கை உள்ளவர் யாரும் கோயிலுக்குள் வந்து தரிசனம் செய்யலாம். எங்களுக்கு ஏசுதாஸ் இந்து மதத்தின் மேல் பெரும் நம்பிக்கை உள்ளவர் என்பது ஏற்கனவே தெரிந்தது தான்.  தற்போது அவரே அதை குறிப்பிட்டு கடிதம் எழுதியதால் அவர் வருவதில் ஒன்றும் தடை இல்லை.” எனக் கூறினார்.

ஏசுதாஸ் தனது கடிதத்தில் தாம் என்று தரிசனம் செய்ய விரும்புகிறார் என்பதைக் குறிப்பிடாத போதிலும் அவர் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி விஜய தசமி அன்று கோயிலுக்கு வர விரும்புவதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

ஏசுதாஸ் பத்மவிபூஷன் விருதையும், பல முறை பாடகருக்கான தேசிய மற்றும் பல மாநில விருதுகளையும் பெற்றவர்.  இந்துக் கடவுள்களின் மேல் பல பாடல்களை பல மொழிகளில் பாடியவர்.  அவர் பல கோயில்களுக்கு சென்றிருந்த போதிலும், குருவாயூர் கிருஷ்ணன் கோயிலிலும், மல்லப்புரம் அம்மன் கோவிலிலும் அவர் பிறப்பால் கத்தோலிக்க கிறித்துவர் என காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.