டில்லி:

சர்ச்சைக்குறிய பத்மாவத் திரைப்படம் இன்று வெளியானது. இதை தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களின் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இது குறித்து அனைத்திந்திய மஜ்லிஸ்&இ&இத்திஹாதுல் முஸ்லீமின் தலைவர் மற்றும் ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுத்தின் ஓவயிசி இந்தியா டுடே டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘பத்மாவத் படத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் முன்பு பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார். ராஜ்புட்களிடம் அவர் தனது 56 அங்குல மார்பை காட்டவில்லை. அதை இஸ்லாமியர்களுக்கு எதிராக மட்டும் தான் காட்டுவார்.

சுவிட்சர்லாந்து டாவோஸ் நகரில் பேசிய மோடி முதலீட்டாளர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிப்பதாக பேசினா. ஆனால், பிரதமரும், அவரது கட்சியும் வன்முறையாளர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது. குழந்தைகள் காயமடைந்துள்ளனர். சொத்துக்கள் எரிக்கப்பட்டுள்ளது. பாஜக.வின் மறைமுக ஆதரவுடன் ராஜ்புட் மற்றும் கார்னி சேனா அமைப்புகள் நேரடியாக வன்முறையில் ஈடுபடுகின்றன’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘உணர்வுகளை திருப்திபடுத்தும் வகையில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளது. படத்தின் பெயரையும் தயாரிப்பு குழுவினர் மாற்றிவிட்டனர். என்ன மாதிரி அரசியல் செய்கிறார்கள்?. நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி இல்லை. போரட்டாக்காரர்கள் முன்பு பாஜக அரசு மண்டியிட்டு கிடக்கிறது.

நான் ஒவ்வொரு திரைப்படத்தையும் எதிர்க்கிறேன். திரைப்பட டிக்கெட்களுக்கு செலவு செய்வதை தவிர்த்து இஸ்லாமிய இளைஞர்கள் ஏழைகளுக்கு உதவ வேண்டும். மக்களின் கருத்துக்கு விடாமலும், யாரையும் கலந்து ஆலோசிக்காமலும் முத்தலாக் ரத்து சட்டத்தை பாஜக கொண்டு வந்துள்ளது’’ என்றார்.